Last Updated : 18 Jan, 2017 01:13 PM

 

Published : 18 Jan 2017 01:13 PM
Last Updated : 18 Jan 2017 01:13 PM

மனிதர்களை அடித்து துன்புறுத்துவது என்ன நியாயம்? - லாரன்ஸ் காட்டம்

மனிதர்களை அடித்து துரத்தி துன்புறுத்துவது என்ன நியாயம் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு லாரன்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

"மேற்கத்திய கலாச்சார விளையாட்டுகள் நம் மக்களின் பொழுதுபோக்குக்கு மட்டுமே சிறந்தது. ஆனால் நம் ஜல்லிக்கட்டு என்பது வீரத்துக்கு உரியதானது.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் வீர விளையாட்டாக கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு தடையா?. ஆண்டு முழுவதும் தங்களது செல்லக் குழந்தைகளாக கருதப்படும் காளைகளை ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாள் தான் விளையாட வைக்கிறார்கள்.

ஆனால் நாள் முழுவதும் எத்தனை லட்சம் உயிர்கள் நம் உணவுக்காகவும், உடைகளுக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்காக மூன்றே நாட்கள் பயன்படுத்தப் படும் காளைகள் வதை செய்யப்படுகிறது என்றால், உணவுக்காகவும், தோலுக்காகவும், உடைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் என்ன தாங்களாகவே தங்கள் தலையை நீட்டி கொல்லப் படுவதை வரவேற்கின்றனவா ?

வீர விளையாட்டுக்கு மிருகவதை என்று பெயராம். வியாபாரத்திற்கு அன்னிய செலாவனி என்று பெயராம். கடந்த சில நாட்களாக சகோதரர், சகோதரிகள் ரோட்டில் நின்று போராடுகிறார்கள் எதற்காக?

நமக்கு பிடித்த விளையாட்டை விளையாட விடுங்கள் என்று, அதற்காக அடித்து உதைத்து துன்புறுத்துவதா? மாடுகளை துன்புறுத்துகிறோம் என்று தடை செய்து விட்டு மனிதர்களை அடித்து துரத்தி துன்புறுத்துவது என்ன நியாயம்?

தமிழன் போராடுவது எதற்காக? தாங்கள் வீரன் என சொல்லப்படுவதற்காக, ஜல்லிக்கட்டு வேண்டி போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம். தயவு செய்து மாநில அரசும், மதிய அரசும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்” என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x