Last Updated : 15 Jan, 2017 11:37 AM

 

Published : 15 Jan 2017 11:37 AM
Last Updated : 15 Jan 2017 11:37 AM

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வலுவான எதிர்ப்பு: ட்விட்டரை உதறினார் நடிகை த்ரிஷா

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்த நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கி வெளியேறினார்.

ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் விவாதங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு சட்ட ரீதியில் நீதிமன்றத்தை அணுகுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் முக்கியப் பிண்ணனியில் இருப்பது 'பீட்டா' அமைப்பு.

உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்த பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடந்தன.

ஆனால், பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் வாய்ப்பு மங்கிப்போனதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், போராட்டத்தையும் வலுப்படுத்தியது.

இந்த நிலையில், பீட்டா அமைப்பின் நல்லெண்ணத் தூதராக உள்ள நடிகை த்ரிஷாவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேலும், சிவகங்கையில் நடைபெற்று வந்த அவரது 'கர்ஜனை' படப்பிடிப்பில் போராட்டம் நடத்தப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

த்ரிஷாவுக்கு எதிராக தகாத வார்த்தைகளில் போஸ்டர்களும் வடிவமைத்து வெளியிட்டன. இதனால், அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிடும்போது, "பீட்டா அமைப்பில் இருந்தாலும் நான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதில்லை. இதற்காக ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் மரியாதை குறைவாக நடத்துவதுதான் தமிழ்ப் பண்பாடா?

இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளவும் தமிழ்ப் பண்பாடு பற்றி பேசவும் வெட்கப்பட வேண்டும்" என்று கடுமையாக சாடினார் த்ரிஷா.

த்ரிஷாவுக்கு திரையுலகினர் ஆதரவு:

கமல்ஹாசன்:

த்ரிஷாவின் கருத்துக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

"த்ரிஷாவை காயபப்டுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அவருக்கும் நமக்குமுள்ள வேற்றுமை ஊரறியட்டும். கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன். கண்ணியத்துக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம். அவதூறு செய்வதன் மூலம் நமது தரப்பை வலுவிழக்கச் செய்ய வேண்டாம். சாதாரண மனிதர்களை விட்டுவிட்டு, முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக போராடுங்கள்"

தம்பி கவுதமன் நடத்துவது போராட்டம். புரிந்தும் துணிந்தும் செய்த செயல் சட்டம் - ஒழுங்கு குலையாமலாவது சிறக்கட்டும். மற்றபடி கண்ணியம் காப்பது கடமை" என்று கமல் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன்:

"மீனாட்சிக்கு கோயில் கட்டி பெண்மைக்கு அன்றே பெருமை சேர்த்த குலம் மாறி இன்று வாய்க்கு வந்த வார்த்தைகளால் மனம் வலித்து கனக்கின்றது. போராட்டங்கள் பல்வேறு வகையில் நடத்தப்படலாம். அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும். வாய்மொழியாகவும் உடல்மொழியாகவும் மற்றவரை தவறாக பேச வேண்டாம்" என்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாக தெரிவித்தார்.

மீண்டும் வெடித்த த்ரிஷா ட்வீட் சர்ச்சை

த்ரிஷாவுக்கு ஆதரவாக வந்த ட்வீட்களை ரி-ட்வீட் செய்து வந்தார். இதனிடையே "நான் ஒரு தமிழச்சி. நான் பீட்டா அமைப்பை ஆதரிக்கிறேன். மிருகங்களை கொடுமைப்படுத்துவதையும், பழங்கால முறை என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்" என்று த்ரிஷாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு ட்வீட் வெளியானது.

அந்த ட்வீட் வந்த சில நிமிடங்களில், "இதனை நான் ட்வீட் செய்யவில்லை. என் ட்விட்டர் கணக்கில் யாரோ ஊடுருவிட்டார்கள்" என்று விளக்கம் அளித்திருந்தார் த்ரிஷா.

த்ரிஷா ட்விட்டர் பகக்த்தில் வெளியான ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ட்வீட்டை தொடர்ந்து, பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வசைபாட ஆரம்பித்தினர்.

அதன்பின், "எனக்கு கணக்கை விட்டு வெளியேறுகிறேன். விரைவில் எனது அடுத்தகட்ட திட்டம் குறித்து தெரிவிப்பேன்" என்று த்ரிஷா ட்வீட் செய்துவிட்டு, தனது ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு வெளியேறினார்.

த்ரிஷாவின் கணக்கில் எவரேனும் ஊடுருவினார்களா, உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து உறுதியாக நம்ப முடியாத வகையில் பல்வேறு தகவல்கள் வெளியான வந்த வண்ணம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x