Last Updated : 20 Feb, 2017 02:30 PM

 

Published : 20 Feb 2017 02:30 PM
Last Updated : 20 Feb 2017 02:30 PM

பாலியல் வன்முறை வடிவங்கள்: அனுபவத்தை முன்வைத்து வரலட்சுமி காட்டமான பதிவு

பெண்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத் தருவதை விட, ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தெடுங்கள் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பேஸ்புக் பகிர்வில் தெரிவித்துள்ளார். தான் சந்தித்த ஒரு மோசமான அனுபவம் பற்றி விரிவாகப் பகிர்ந்துள்ள வரலட்சுமி சரத்குமார், அந்த பதிவில் இதைக் குறிப்பிட்டுள்ளார்

அவர் எழுதிய பேஸ்புக் பதிவின் தமிழ் வடிவம் பின்வருமாறு,

”இதை எழுதலாமா, வேண்டாமா என 2 நாட்கள் கடுமையாக எனக்குள் விவாதித்த பிறகே தற்போது எழுதுகிறேன். இன்றைய சமூக ஊடக உலகில், நேர்மையான வார்த்தைகள் பேசப்படும்போது கூட அவை தவறாக மதிப்பிடப்படுகின்றன. அது நடக்ககூடாது. ஆனால் கடைசியில் இந்த சம்பவம் பற்றி பகிர்ந்தே ஆக வேண்டும் என உறுதியாக நினைத்தேன்.

முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் தலைமை நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ஒருவருடன் வேலை தொடர்பான சந்திப்பில் இருந்தேன். அந்த அரை மணி நேர சந்திப்பு முடியும்போது, "நாம் எப்போது வெளியே சந்திக்கலாம்" என அவர் கேட்டார். அதற்கு, "வேறு எதாவது வேலை தொடர்பாகவா?" என நான் கேட்டேன். அதற்கு அவர், (அதுதான் வழக்கம் என்பதுபோல் அற்பத்தனமான சிரிப்புடன்) "இல்லை இல்லை, வேலை தொடர்பாக இல்லை. மற்றவைகளுக்காக" என்றார். நான் எனது அதிர்ச்சியையும், கோபத்தையும் மறைத்துக் கொண்டு, "மன்னித்துவிடுங்கள், தயவு செய்து கிளம்புங்கள்" என்றேன். கடைசியாக அவர், "ஓ அவ்வளவுதானா?" என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே நடந்து சென்றார்.

இதுபோன்ற சம்பவம் குறித்துக் கேள்விப்படும்போது, துறையைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களின் பதில், "சினிமாத் துறை இப்படித்தான். நீ இங்கு வரும்போது தெரிந்துதானே வந்தாய். தற்போது ஏன் இந்த அதிர்ச்சி, புலம்பல்" என்று வரும்.

எனது பதில் இதுதான், நான் ஒரு சதைப்பிண்டமாக நடத்தப்பட இந்த துறைக்கு வரவில்லை. அல்லது பெண்களை பயன்படுத்தும் ஏற்கனவே இருக்கும் இந்த நடைமுறைகளை பின்பற்ற வரவில்லை. எனக்கு நடிப்பு பிடிக்கும். இது நான் விரும்பி தேர்வு செய்த தொழில். நான் கடினமாக உழைப்பேன். நன்றாகவும் வேலை செய்கிறேன். 'பொறுத்துக் கொள் அல்லது வெளியேறு' என்பதை நான் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.

ஒரு பெண்ணாக எனக்குத் தெரிவது ஒரே விருப்பம் தான். தாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது வாய் விட்டு பேச வேண்டும். முக்கியமான விருப்பங்கள் ஆண்களுக்கு தரப்பட வேண்டும். பெண்களை அவமதிப்பதை நிறுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்.

நான் ஒரு நடிகை. நான் திரையில் ஒரு கவர்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்கிறேன் என்பதற்காக என்னிடம் மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்ற தேவை இல்லை. இது என் வாழ்க்கை, என் உடல், என் விருப்பம். எந்த ஆணும் என்னை அவமதித்துவிட்டுப் போகலாம் என எண்ணிவிடக் கூடாது. இது ஒரு சின்ன சம்பவம், கடைசியில் தான் எதுவும் நடக்கவில்லையே, ஏன் அதைப் பற்றி பேசவேண்டும் என நினைப்பவர்கள், இந்த சம்பவம் ஒரு சிறிய மாதிரிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த நபரைப் பற்றிய விவரங்களைக் கேட்பவர்களுக்கு, அதைச் சொல்லவேண்டிய இடமோ, தருணமோ இது அல்ல. ஏனென்றால் அது இருக்கும் பெரிய பிரச்சினையிலிருந்து விஷயத்தை திசைமாற்றிவிடும். இது ஒரு சிறிய சம்பவமாக, அதிர்ஷ்டவசாமாக அசம்பாவிதங்கள் இன்றி முடிந்ததாக இருக்கலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை கோடிட்டு காட்ட எனக்கு உதவியுள்ளது.

பெண்கள் என்ன அணிய வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி முறையாக நடந்து கொள்ள வேண்டும் என சொல்வதை விடுத்து, உங்கள் பிறப்புறுப்புகளின் வழியாக யோசிக்காதீர்கள், பெண்களை வலிமையானவர்களாக, சுதந்திரமானவர்களாக, திறமையான சரிசமமான மனிதராக பாருங்கள் என ஏன் ஆண்களிடம் சொல்லக் கூடாது. சிறந்தவர்களாக நடக்க ஆண்களுக்கு கற்றுத்தாருங்கள். ஒவ்வொரு பெற்றோரும் வீட்டில் இதை தொடங்க வேண்டும்.

திரைத்துறை மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும், கலாச்சாரத்திலும், வயது வித்தியாசமின்றி பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் நடந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, சரிசமமாக நடத்தப்படாத ஆணாதிக்க சமூகத்தில் ஊறியுள்ள பிரச்சினை இது. தங்கள் விருப்பம் போல நடத்தும் ஒரு பொருளாகத்தான் ஆண்கள் பெண்களைப் பார்க்கிறார்கள்.

பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பெண்களை முரட்டுத்தனமாக நடத்துதல், அவமதித்தல் ஆகியவை அபாயகரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நமது கல்வி நம்மை கைவிட்டு விட்டது. நான் பாதிக்கப்பட்டவள் அல்ல. அப்படி பேசவும் விரும்பவில்லை. பேச பயப்படும் மற்ற பெண்களின் சார்பில் பேசுகின்றேன். அவர்களுக்கு ஆண்களைப் பார்த்தால் பயம். வாய்விட்டு பேசினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம்.

இப்போது நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால், பெண்களின் பாதுகாப்பு என்பது கனவாக மட்டுமே இருக்கும். நமது சமூகத்தில் இருந்து பாலியல் வன்முறை என்ற வார்த்தைகளை நீக்கவே முடியாது.

நான் அமைதியாக இருக்க மாட்டேன். எனது சகோதரிகளையும், நண்பர்களையும் முன்வந்து பேசுமாறு அழைக்கிறேன். நீங்கள் இப்போது தனி அல்ல”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x