Last Updated : 09 Jun, 2016 06:26 PM

 

Published : 09 Jun 2016 06:26 PM
Last Updated : 09 Jun 2016 06:26 PM

ரஜினியின் 2.0 வெளியீட்டு திட்டங்கள்: லைக்கா விளக்கம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் வெளியீட்டு திட்டங்கள் குறித்த சிறப்புத் தகவல்களை லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைக்கா நிறுவனம் சுமார் ரூ. 350 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் மீண்டும் '2.0' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

'2.0' குறித்து லைக்கா நிறுவனத்தின் ராஜூப் மகாலிங்கம், "அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப் படத்தில் ஏதாவது இருக்கும். படம் வெளியானதும், ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக இயக்குநர் ஷங்கருக்கு இருக்கும் திறமையை தெரிந்து கொள்வீர்கள்.

ரஜினி 125-க்கு மேல் ஹிட் படங்கள் தந்துள்ளார். நடுவில் வந்த ஒரு சில தோல்விப் படங்களால் அவரது இமேஜ் மாறிவிடாது. தங்கம் எப்போதும் தங்கமே. ரஜினி என்கிற பிராண்டை அசைக்க முடியாது.

’எந்திரன்’ முதல் பாகம் வெளிவரும்போது சமூக வலைதளங்களின் வளர்ச்சி அவ்வளவாக இல்லை. தற்போது ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், ஷங்கர், ரஹ்மான் ஆகியோர் இணையும் போது இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நினைக்கிறேன்.

ஒரு மொபைல் நிறுவனமாக இருந்தாலும், படத்தின் இசையை பல்வேறு வடிவில் எடுத்துச் செல்லும் திட்டங்கள் இருக்கிறது. மேலும், படத்தை மிகப்பெரிய அளவில் சீனாவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செப்டம்பர் மாதத்திலும், படத்தை 2017-ம் ஆண்டு இறுதியிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x