Published : 30 Mar 2014 10:40 PM
Last Updated : 30 Mar 2014 10:40 PM

இனம் படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய 'இனம்' படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.

உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.

தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்க்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.

அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.

அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.

ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.

எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் நாளை முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்" என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x