Last Updated : 13 Mar, 2014 04:42 PM

 

Published : 13 Mar 2014 04:42 PM
Last Updated : 13 Mar 2014 04:42 PM

பாடல் காட்சிகளில் கவிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: இயக்குநர் பாரதிராஜா

பாடல் காட்சிகளில் கேமராமேன்களின் ஆளுமைகளை குறைத்துக்கொண்டு பாடல் எழுதும் கவிஞனின் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளார்.

ராட்டினம் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி இயக்கும் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதி ராஜா, பாக்கியராஜ், விக்ரமன், பாண்டிராஜ், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் டி.சிவா, ஏ.வெங்கடேஷ், பேரரசு, படத்தின் நடிகர்கள் சத்யா, லகுபரன், நாயகி முகி, பாடலாசிரியர் பிரான்சிஸ்கிருபா உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது :

ஒரே மாதிரி மேடை, ஒரே மாதிரி பேச்சு, வாழ்த்து என்று இருப்பதால் இசை நிகழ்ச்சிகளை தவிர்க்க முடிவெடுத் திருந்தேன். அதை குறிப்பிட்டு சொல்லியும் வருகிறேன். படத்தின் இயக்குநர் தங்கசாமியோடு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததால் என் முடிவை தூக்கி வைத்து விட்டு வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவனுடைய தன்னம்பிக்கை. இந்தப்படத்திற்காக எட்டுத்திசையிலும் முட்டி மோதி முழு தன்னம்பிக்கையோடு உழைத்திருக்கிறான். படத்தின் தலைப்பு அவனுக்கு நிச்சயம் பொருந்தும்.

இங்கே இருக்கும் எல்லா கலைஞர்களுக் குமான ஒரு விஷயம். பாடல் காட்சி வரும்போது முழுக்க கேமராமேன்களின் ஆளுமையே அதிகமாக இருக்கிறது. அதனால் கவிஞர்களுடைய வரிகள் முக்கியத்துவமானதாக ஆகாமல் தடைபடுகிறது. வரிகள் ஒன்றாக இருக்கிறது, வடிவம் வேறாக இருக்கிறது. இரண்டையும் சேர்ந்து லிப் மூவ்மெண்ட் கொடுத்து ஒரு நடிகன் பாடும்போதுதான் முகபாவனையோடு அந்த நடிகனை பார்க்க நன்றாக இருக்கும். காட்சியும் சிறப்பாக அமையும். படத்தில் ஒரு பாடலையாவது அப்படி வைக்க வேண்டும். கேமராமேன்களின் ஆளுமையை கொஞ்சம் குறைத்துக்கொண்டு பாடலை எழுதும் கவிஞர்களுக்கு மரியாதை கொடுங்கள்.

பாக்கியராஜை ஹீரோவாக வைத்து ‘புதிய வார்ப்புகள்’ இயக்கினேன். இப்படி ஒருவனை வைத்து ஒரு படமா என்றும், திமிரோடு இந்த வேலையில் இறங்குறேன் என்றும் கூறினார்கள். அப்போதைய பல ஜாம்பவான்கள் என்னிடம் எதுக்கு இந்த வேலை என்றும் கேட்டார்கள். என் மீது எனக்கு இருந்த தன்னம்பிக்கைதான் அதற்கு காரணம். நம்மிக்கையை மட்டுமே வைத்து ஜெயித்தவன் நான். இந்தப்படத் தின் இயக்குநர் தங்கசாமிக்கும் அந்த தன்னம்பிக்கை அதிகம் இருக்கிறது. அவருடைய குழுவினர் அனைவரும் நல்ல உழைப்பை சிந்தியிருக்கிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.’’ என்றார்.

இயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், “இந்த இயக்குநரின் முதல் படம் ‘ராட்டினம்’ நல்ல படம். சரியாக போகவில்லை என்று பலரும் சொன்னார்கள். அந்த நல்ல படம், இங்கே ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்த படமாக அமைந்துவிட்டது. உழைப்பு என்றைக்கும் தோல்வியை கொடுக்காது. தன்னம்பிக்கையை தளர விடாமல் இருந்தாலே போதும். தப்பு நடக்க வாய்ப்பே இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x