Published : 02 Jan 2014 00:00 am

Updated : 06 Jun 2017 17:27 pm

 

Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 05:27 PM

தமிழ் சினிமா 2013: உள்ளம் கவர்ந்த ஜோடிகள்

2013

இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், திரையில் தெரியும் நாயகனும் நாயகியும்தான் ஒரு படத்தின் வெற்றிக்கான தூதுவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு பிடித்த நாயகன் - நாயகி காம்பினேஷன் ஹிட்டானால் அவர்களை நம் ரசிகர்கள் உள்ளங்கைகளால் தாங்குவார்கள். கமல்- தேவி, ரஜினி - பிரியா, பிரபு - குஷ்பு... என்று இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் கடந்த ஆண்டு ஹிட்டான ஜோடிகள்.

ஆர்யா – நயன்தாரா


‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் அறிமுகமான இந்த ஜோடி அப்போதே பேசப்பட்டது. மீண்டும் ‘ராஜா ராணி’யில் ஜோடி சேர்ந்த இவர்களை ‘மேட் ஃபார் ஈச் அதர், ஜோடியாக ஜான் – ரெஜினா கதாபாத்திரங்களில் ‘ராஜா – ராணி’ படத்தில் வார்த்தெடுத்தார் இளம் இயக்குநர் அட்லி. படத்தில் ஜெய்யுடனும் நயன்தாரா நடித்திருந்தாலும், ஆர்யா – நயன்தாரா கெமிஸ்ட்ரியே பெரிதும் பேசப்பட்டது. மேலும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஆர்யா – நயன்தாரா திருமணம் என்ற உத்தியை பயன்படுத்தியதும் பரபரப்பைக் கிளப்பியது. ‘ராஜா – ராணி’ 30 கோடி வசூல் செய்தது மட்டுமல்ல, இந்தப் படத்தின் ஆடியோ, காலர் டுயூன் சந்தை. பண்பலையில் பாடல்கள் வரிசையில் முன்னணிஎன எல்லாவற்றிலும் கலக்கியது. ஆர்யாவுடன் இனி இணைந்து நடிக்கமாட்டேன் என்று நயன்தாரா சொல்லும் அளவுக்கு இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

விஷால் – லட்சுமிமேனன்

தொடர்ந்து பாக்ஸ் ஆபீசில் தடுமாறிவந்த விஷாலுக்கு, இந்த ஆண்டு கைகொடுத்த படம் ‘பாண்டிய நாடு’. இதில் ஒரு சாமான்ய மதுரை இளைஞனாக நடித்த விஷாலுக்கு ஜோடியாக, ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் லட்சுமிமேனன். இந்தப் படத்தில் இவர்களது காதல் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் குவிந்தார்கள்.

சூர்யா – அனுஷ்கா

60 கோடிக்கு குறையாத வசூல் குவித்த சிங்கம் 2-ஆம் பாகத்தில், சூர்யாவின் காதலியாக, முதல்பாகத்தில் நடித்த அனுஷ்கா, 2 ஆம் பாகத்தில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். இளமைத்துள்ளலுக்கு ஹன்சிகா இன்னொரு கதாநாயகியாக இதில் சேர்க்கப்பட்டாலும், அனுஷ்கா – சூர்யா இடையேயான காதல் காட்சிகளுக்குதான் இதில் அதிக வரவேற்பு.

நஸ்ரியா – நிவின்

அல்போன்ஸ் புத்திரனின் இசை ஆல்பத்தில் நிவினுடன் ஜோடி சேர்ந்து யூடியூப் ரசிகர்களிடம் எக்குத்தப்பாக ஏற்கனவே பிரபலமாகியிருந்தது இந்த ஜோடி. மீண்டும் அதே அல்போன்ஸ் இயக்கத்தில் ‘நேரம்’ படம் வழியாக தமிழுக்கு அறிமுகமான இந்த ஜோடியின் இயல்பான, கவித்துவமான உடல்மொழியால் இவர்களை தங்களுக்கான ‘கனவு ஜோடியாக’ ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். வெறும் 2 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், கதை சொன்ன விதத்துக்காக மட்டுமல்லாமல், நஸ்ரியா – நிவின் ஜோடிக்காவும் 9 கோடி வசூல் செய்து கலக்கியது.

ஜீவா - த்ரிஷா

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஜெசி கதாபாத்திரத்தில் தோன்றிய த்ரிஷாவுக்கு மீண்டும் அதைவிட சிறப்பான பாராட்டு கிடைக்கச் செய்த படம் ‘என்றென்றும் புன்னகை’. இந்தப் படத்தில் இளம் விளம்பர காப்பி ரைட்டர் ப்ரியாவாக – ஜீவாவை மனதில் வரித்துக்கொண்டு அவர் காதலைச் சொல்லமாட்டாரா என்று ஏங்கும் கதாபாத்திரத்தில் காட்டிய இயல்பும் நெருக்கமும் ரசிகர்களுக்கு ஜீவா - த்ரிஷா ஜோடியை மிகவும் பிடிக்க காரணமானது.

விஜய் – அமலாபால்

வியாபார ரீதியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கில் இருக்கும் ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து வந்த அமலாபால், விஜயுடன் ஜோடி சேர்ந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தில் விஜய் – அமலா இடையிலான காட்சிகள் ரசனையாக அமைந்து விட்டதும், க்ளைமாக்ஸில் அமலா பால் திடீர் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுத்ததும் ரசிகர்களை கவர்ந்ததால் இந்த ஜோடி பேசப்பட்டது.

இந்த ஆண்டில் அஜீத்தின் ஆரம்பம் வெளியான போதிலும், அவர் இப்படத்தில் காதல்காட்சிகளில் அவ்வளவாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சூர்யா – அனுஷ்காவிஜய் – அமலாபால்ஜீவா - த்ரிஷாஆர்யா – நயன்தாரா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x