Last Updated : 20 May, 2017 06:53 PM

 

Published : 20 May 2017 06:53 PM
Last Updated : 20 May 2017 06:53 PM

சமூக அவலங்கள் நடந்தால் எதிர்த்து நில்லுங்கள்: மன்ற நிர்வாகிகளிடமும் கார்த்தி கோரிக்கை

சமூக அவலங்கள் நடந்தால் அதை எதிர்த்து நில்லுங்கள் என்று மக்கள் நல மன்ற நிர்வாகிகளிடம் கார்த்தி தெரிவித்தார்.

மே 25-ம் தேதி கார்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் நடிகனான அறிமுகமாகியும் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கார்த்தி, ராஜசேகரபாண்டியன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ராஜுமுருகன், சரவணன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் மற்றும் புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கார்த்தி பேசியதாவது:

"கார்த்தி மக்கள் நல மன்றம் துவங்கி 10 வருடம் ஆகிவிட்டது. நம்மை சுற்றி இருக்கும் எல்லாம் மாறிவிட்டது ஆனால் அன்பு மட்டும் நிலைத்திருக்கிறது. வெற்றி , தோல்வி என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். ஆனால் விழுந்தால் எழுந்து வரவேண்டும் அது தான் முக்கியம். நம்மை சுற்றி நிறைய தீய விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் நல்ல விஷயங்களை மட்டும் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

என்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மிகப்பெரிய நபர்களாக பார்க்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள் சாதனையாளர்கள் என்று பெருமைபட்டு கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும். உழைப்பு மிகவும் முக்கியம். நாம் எப்போதும் உழைக்க சலிக்கவே கூடாது. நான் ஒரு காலத்தில் ரஜினிக்கு ரசிகராக இருந்தேன். இப்போது எனக்கு நீங்கள் ரசிகர்களாக , நண்பர்களாக , அண்ணன் , தம்பிகளாக இருக்கிறீர்கள். என்னுடைய தந்தை கடவுள் நமக்கு அதிகமாக கொடுக்கிறார் என்றால் அதை நாம் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காகத் தான் என்று சொல்வார்.

நீங்கள் எல்லோரும் கடுமையாக உழையுங்கள். நல்ல பணம் சம்பாதியுங்கள். அடுத்தவங்களுக்கு உதவி செய்யுங்கள். முடிந்தளவுக்கு உங்களை சுற்றி இருக்கும் நலிந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யுங்கள். பெண்களைப் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது இச்சமூகத்தில் பெண்களுக்கு நிறைய அவலங்கள் நடக்கின்றன. தெருவில் பெண்களை யாரேனும் கிண்டல் , கேலி செய்தால் அதை தடுத்து நிறுத்துங்கள். பெண்களை நாம்தான் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டில் உள்ள பெண்களையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் உங்களை நம்பி வந்தவர்கள். அதை போல் உங்க ஊரில் ஏதேனும் சமூக அவலங்கள் நடந்தால் அதை எதிர்த்து நில்லுங்கள். உங்களுக்கு ஏதேனும் மிகப் பெரிய பலம் தேவைப்படும் போது நமது மக்கள் நல மன்றமும் தங்களோடு ஒன்று சேரும்" என்று பேசினார் கார்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x