Published : 08 Jun 2016 05:50 PM
Last Updated : 08 Jun 2016 05:50 PM

இசையமைப்பாளர் கோவர்தனுக்கு நிதியுதவி: முதல்வருக்கு தேவா நன்றி

உதவி இசையமைப்பாளர் கோவர்தனுக்கு நிதியுதவி அளித்ததற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு இசையமைப்பாளர் தேவா நன்றி தெரிவித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளைய ராஜா, தேவா ஆகியோரிடம் உதவி இசையமைப்பாளராக இருந்தவர் கோவர்தன் (88). அவர் தற்போது மனைவியுடன் சேலத்தில் வசித்து வருகிறார். எந்தவிதமான வருமானமும் இல்லாமல் வறுமைச் சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்க்கை நடத்த நிதியுதவி வழங்குமாறும் முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.

அவரது வேண்டுகோளை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவர் தேவா முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இயல், இசை,நாடகம், நாட்டியம் திரைப்படம் மற்றும் கிராமியக் கலைகள் என பல தரப்பட்ட கலைப் பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுக்கு முதல்வர் அவர்கள், நலிந்த நிலையில் வாழும் புகழ் பெற்ற வயோதிக கலைஞர்களுக்கு மாதம் தோறும் நிதி உதவி வழங்குதல்,

மறைந்த கலைஞர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு குடும்ப பராமரிப்பு உதவி தொகை வழங்குதல் இளம் கலைஞர்களை வெளி ஊருக்கு அறிமுகம் செய்யும் வண்ணம் அவர்களுக்கு கலைநிகழ்ச்சி வழங்கி ஊக்குவித்தல், புதிய நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடை ஏற்றம் செய்ய நிதி உதவி வழங்குதல். நலிந்த கிராமிய கலைஞர்கள் இசை கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு நிதி உதவி அளித்தல், கலை மேதைகளின் நினைவினை போற்றும் வகையில், தன்னார்வ கலை நிகழ்சிகளுக்கு நிதி உதவி வழங்குதல்,

அரும் பெரும் கலை நூல்களை பதிப்பித்து வெளியிட நூற்ப்பதிப்பு மானியம் வழங்குதல், தொன்மை சிறப்புமிக்க கலை அம்சங்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் தெருக்கூத்து, இசை நாடகம் பொம்மலாட்டம், தோற்பாவை கூத்து போன்றவற்றை ஆவணப்படமாக்க எண்ணற்ற உதவிகளை செய்துவருகிறார்கள். அத்துடன் நமது பாரம்பரிய கிராமிய கலைகளையும், கலைஞர்களையும் வெளி நாடுகளிலும் புகழ் பெரும் வண்ணம் நிதியுதவி வழங்கி கௌரவித்து வருகிறார்.

அவ்வகையில் தான் திரைப்பட இசையமைப்பாளர் திரு.கோவர்தன் மாஸ்டர் அவர்களுடைய வறுமை நிலையினை மனதிற்க் கொண்டு தாயுள்ளத்தோடு, 10 லட்சம் நிதியுதவி வழங்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இசை குடும்பத்தினர் மீது எந்த அளவிற்கு கருணையும், பற்றுதலும் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

கடவுள் மனித ரூபத்தில் வந்து பக்தர்களுக்கு உதவிகளை செய்வார் என்று கூறுவார்கள். அது போன்று இந்த பேருதவி செய்ததற்கு ஒட்டுமொத்த இசைக் குடும்பங்களின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x