Published : 12 Sep 2016 08:18 PM
Last Updated : 12 Sep 2016 08:18 PM

காவிரி விவகாரத்தில் வன்முறை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்: தமிழ் திரையுலகம் வேண்டுகோள்

காவிரி பிரச்சினையில் வன்முறை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம், சட்டத்தின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று கன்னட அமைப்புகளுக்கு தமிழ் திரையுலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகியவை இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டது.

அதில் கூறியதாவது: ''கடந்த சில நாட்களாக காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்துவிட்டிருப்பதை எதிர்த்து, கர்நாடக மாநிலத்தில் நடக்கும் வன்முறைகள் மிகுந்த கவலையை அளிக்கின்றன. நாம் எல்லோரும் பாரத நாட்டின் புதல்வர்கள். இந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்கும் சகோதரர்கள் என்ற கருத்துக்கு சேதம் விளைந்துவிட்டதே என்று வேதனையை அளிக்கிறது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகத்தில் உள்ள சிலர் புரிந்துகொள்ளாமல் எதிர்ப்பது வேதனையைத் தருகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம், நெய்வேலி ஆகிய இடங்களிலிருந்து தமிழக மின்சாரத்தை கர்நாடகத்துக்கு தாராளமாக அளித்துக் கொண்டிருக்கிறார்.

வன்முறையை விரும்பாதவர் முதல்வர் ஜெயலலிதா. அதனால்தான் நாங்களும் வன்முறையை நம்பாமல் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழக முதல்வரை சில கன்னட அமைப்புகளும், சில கன்னட திரையுலகினரும் அவமதிக்கும் வகையில் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஃபேஸ்புக்கில் ஒரு தமிழ் இளைஞன் கருத்து தெரிவித்ததற்காக, அவரை 10-க்கும் மேற்பட்ட கன்னட இளைஞர்கள் தாக்குவதை வீடியோ எடுத்து வெளியிடுவது நம் நல்லுறவுக்கும், நட்புறவுக்கும் உகந்தது அல்ல.

கன்னட மக்களும் தமிழகத்தில் வாழ்கிறார்கள். இந்த சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் ஒரு சிலரின் வெறிச்செயலால் பாதிக்கப்படுவதை நாம் அனைவரும் பொறுப்புணர்வோடு புரிந்துகொண்டு, வன்முறையைத் தடுக்க வேண்டும். எல்லோரும் பாதுகாப்புடன் வாழ வேண்டும்.

இன்றைய நிகழ்வு நாளைய சரித்திரம். வருங்காலத்தில் நம் சந்ததியினர் புரட்டிப்பார்க்கும்போது இதுமாதிரியான கருப்புப் பக்கங்களைத் தவிர்ப்போம்.

பேச்சுவார்த்தை மூலம், சட்டத்தின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். அடுத்த சந்ததிக்கு பொன்னான பக்கங்களை விட்டுச் செல்வோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x