Published : 11 Jun 2017 10:21 AM
Last Updated : 11 Jun 2017 10:21 AM

‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்தை அனுமதியின்றி இயக்கியதாக ரமேஷ் செல்வன் மீது வழக்கு பதிவு

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தை உரிய அனுமதியின்றி இயக்கியதாக அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

சூளைமேட்டைச் சேர்ந்த பெண் ஐ.டி ஊழியர் சுவாதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின் வயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவர இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தின் டிரெயிலர், சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், சில தினங்களுக்கு முன்னர் டிஜிபியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்து என் மகளைக் கொன்ற கொலை யாளியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். என் மகள் இறந்து ஓராண்டு ஆன நிலையில் நாங்கள் அவளைப் பற்றிய நினைவுகளை மறக்க முடியாமல் இருக்கிறோம். இந்நிலையில் ‘சுவாதி கொலை வழக்கு’ என்று என் மகள் பெயரில் வெளியாக உள்ள சினிமா டிரெயிலரைப் பார்த்து எனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி யுள்ளது. அந்த படத்தில் எனது மகளின் வாழ்க்கையை வேண்டுமென்றே தவறாக சித்தரித்து நிறைய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அறிகிறேன். இது எங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் என மகள் கொலை வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட வழக்கு. இதனால் அது தொடர்பான படத்தை எடுத்து வெளியிடுவது சட்ட விரோதமானதாகும். ஆகவே இப்படத்தை வெளியிடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே சென்னை யில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அப்படத்தின் இயக்கு நர் ரமேஷ் செல்வன், ‘’சுவாதியை படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை. படத்தை சுவாதியின் பெற்றோரிடம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறோம். அதுபோல் இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தை சுவாதி குடும்பத் தாருக்கும் ராம்குமார் குடும்பத்தாருக்கும் தர தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

டிஜிபி உத்தரவு

இதற்கிடையில், சுவாதியின் தந்தை அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதனுக்கு டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரமேஷ் செல்வன் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறும்போது, “எந்த விதமான முன் அனுமதியும் இன்றி சுவாதி கொலை வழக்கு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெயிலரும் சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிந்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x