Published : 09 Oct 2014 10:52 AM
Last Updated : 09 Oct 2014 11:19 AM
வழக்குகள் வரும் என்பதால் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக மாவட்டச் செயலாளர்களில் பலர் தயக்கம் தெரிவித்துள்ளனர். ஆனாலும், உள்ளூர் பிரச்சினையை வைத்து போராட்டங்கள் நடத்துமாறு அவர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:
பொதுச் செயலாளர் அன் பழகன் பேசும்போது, ‘முக்கிய எதிர்க்கட்சியான நாம், அமைதி யான முறையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவிக்கலாம்’ என்றார். அதன் பின், பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார். தமிழகத்தில் நடந்த சட்டம், ஒழுங்கு சம்பவங்களை பட்டியலிட்டார்.
இந்த நேரத்தில் தீர்ப்பு குறித்து வெளிப்படையாக தேவையற்ற விவாதங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கனிமொழி எம்.பி. பேசும் போது, ‘ஜெயலலிதாவை தனிநபர் விமர்சனம் செய்ய வேண்டாம். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா மீதான வழக்கு, தீர்ப்பு விவரங்களை தெளிவாக எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார்.
மாவட்டச் செயலாளர்கள், தங்கள் பகுதிகளில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டாலும், பலர் அதிமுக போராட்டம் குறித்து சுருக்கமாகவே பேசி முடித்தனர். ஜெயலலிதா மீது பொதுமக்களில் ஒரு தரப்பினர் மத்தியில் அனுதாபம் இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். எதிர்த்து போராடுவதைவிட இந்த நேரத்தில் அதிமுகவினர் மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள் ளனர்.
உள்ளூர் அளவில் போராட்டம் நடத்தலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டபோதும், பல மாவட்டச் செயலாளர்கள் அமைதியாகவே இருந்தனர். அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதால், மாவட்டச் செயலாளர் உட்பட நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. கட்சித் தேர்தல் நடந்துவரும் நிலையில், இந்த வழக்குகள் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தலைமைக் கழக நிர்வாகிகளிடம் சிலர் கூறினர். தீர்ப்பு வெளிவந்த நாளில் கருணாநிதி, ஸ்டாலின் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்ததையும் சுட்டிக் காட்டினர்.
மேலும், கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை பல வழக்குகளை பதிந்தது. அந்த பைல்களை தூசி தட்டி எடுத்து, மீண்டும் மறு விசாரணை நடத்த அதிமுக அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
ஆனாலும், முக்கிய எதிர்க்கட்சியான திமுக மவுனமாக இருப்பது, சரியான அணுகுமுறையாக இருக்காது. உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் அறிவிக்கலாம். அதிலேயே ஜெயலலிதாவின் வழக்கு, அதிமுக போராட்டம், பஸ் எரிப்பு பற்றியெல்லாம் விரிவாக பேசலாம். அதையும் மீறி வழக்குகள் வந்தால் சந்திக்கலாம் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சித் தலைமை தைரியம் கொடுத்துள்ளது.
இவ்வாறு திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.