Published : 01 Nov 2013 02:13 PM
Last Updated : 01 Nov 2013 02:13 PM

என் அழகை எண்ணி கர்வப்படுகிறேன்: ஸ்ருதிஹாசன்

“செல்போன் வழியே அப்பாவின் குரலை ஒருமுறையாவது கேட்டால்தான் அன்றைய பொழுது நகரும்.” ‘அப்பா செல்லமாக’ப் பேச ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, தாண்டி, பாலிவுட்டிலும் ‘மோஸ்ட் வாண்டெட்’இளம் நாயகியாக வலம்வரும் ஸ்ருதி, தமிழ்த்திரையைத் தள்ளிவைத்தது ஏன் என்ற காட்டமான கேள்வியோடு பேட்டியைத் தொடங்கினால், கூலாக எல்லாக் கேள்விகளையும் எதிர்கொள்ளும் துணிச்சல் அவர் பதில்களில் தெறிக்கிறது...

இத்தனை குறைவான ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேச எப்போது கற்றுக்கொண்டீர்கள்.?

காரணம் அப்பாதான்! ‘தமிழில் பேசுவதென்றால் தமிழில் பேசு. அதுதான் நம் மொழியைக் கௌரவமாக்கும் முதல்படி’என்றார். ஆங்கிலம் கலந்த தமிழில் பேசினால் அவருக்குக் கோபம் வந்துவிடும்.

போற்றிப்பாடடி பெண்ணே என்று மழழைக் குரலில் உங்கள் இசைப் பயணம் தொடங்கியது. பிறகு உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்தீர்கள். பிறகு கம்போஸர் ஸ்ருதிஹாசன் எங்கே போனார்?

இசைக்கு மட்டும்தான் சாகாவரம் கொடுத்திருக்கிறார் கடவுள். இசையை எப்போது வேண்டுமானாலும் நம் வசமாக்கிக் கொள்ளலாம். ஆனால் நம்மை மாதிரி மனிதர்களுக்குக் கடந்து போகும் ஒரு நாளும் திரும்ப வராதல்லவா? அதனால்தான் தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் தருகிறேன். 3 படத்தில் பள்ளி மாணவியாக நடித்தேன். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து நான் பள்ளி மாணவியாக நடிக்க முடியாதே!. இரண்டிலும் கவனம் செலுத்தலாம். ஆனால் இரண்டையுமே சரியாகச் செய்ய முடியாமல் போகலாம். என்றாலும் சில ஆங்கிலப் பாடல்களை எழுதி, அவற்றுக்கு நேரம் அமையும்போதெல்லாம் இசைக் குறிப்புகள் எழுதிவருகிறேன். சமீபத்தில் ‘டிஸ் அப்பியர்’ என்ற பாடலை எழுதி மெட்டமைத்திருக்கிறேன். நான் லைவ் கான்செர்ட்டுகள் நடத்தமுடியாமல் போனதற்கும் நேரமின்மையே முதன்மையான காரணம்.

மும்பை வாசம் எப்படியிருக்கிறது?

அம்மாவைக் கட்டி அனைத்துகொண்டு தூங்கக் கசக்குமா என்ன? எனக்குப் போட்டியாக அம்மாவின் இன்னொரு பக்கம் தங்கை. தினசரி அம்மாவிடம் முத்தம் வாங்கிக்கொண்டு படப்பிடிப்புக்குக் கிளம்புவதில் இருக்கும் உற்சாகம் நாள் முழுவதும் வடியாது. அதேபோலத் தெலுங்கு பட உலகம் என்றாலும், ஹிந்திப் பட உலகம் என்றாலும் என்னை ஒரு தமிழ்ப் பெண்ணாகப் பார்க்கிறார்கள். அங்கே நான் சுதந்திரமாக ஷாப்பிங் செய்ய முடியாது. அதுவே சென்னை என்றால் காய்கறி வாங்கக்கூட மேக்-அப் இல்லாமல் கடைக்குச் செல்வேன். என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. தெரிந்தாலும் ஹாய் சொல்லிச் செல்வார்கள். ஆனால் மும்பையில் எனது தேவைகள் அனைத்தையும் அம்மா பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்கிறார்.

அம்மா சமைப்பதில் அதிகம் பிடித்தது எது?

கோஸ் பொறியல். மஹாராஷ்டிர முறையில் செய்வாங்க. சாப்பாட்டுக்குப் பதிலாக அதை மட்டுமே சாப்பிடலாம்.

எந்தக் கட்டத்தில் இசையிலிருந்து நடிப்பு என்று முடிவுசெய்தீர்கள்?

என் ரத்த அணுக்களைக் கேட்க வேண்டிய கேள்வி. நான் நடிக்க மாட்டேன் என்று என்னை நானே ஏன் ஏமாற்றிக்கொள்ள வேண்டும். அதுவுமில்லாமல் அப்பாவுக்குப் பெயர் சொல்ல ஒரு பிள்ளையாவது அவர் வழியில் வர வேண்டாமா? இப்படிக் கேட்டுக்கொண்ட கேள்விகள்தான் என்னை நடிப்புக்குக் கூட்டி வந்தன. தவிர நான் திரை மற்றும் அரங்க நடிப்பைக் கற்றுக்கொள்ள அவசியமில்லை. அப்பாவே எனக்கு மிகச் சிறந்த பள்ளிக்கூடம்.

நீங்கள் நடிக்க வந்தபோது தங்கை என்ன சொன்னார்? உங்கள் வழியில் அவரும் நடிக்க வருவாரா?

என் தங்கை மிக அழகானவள். நான் நடிக்க வந்தபோது அவளுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை. அவள் நடிக்க வருவாளா என்பதை அவள் இன்னும் முடிவுசெய்யவில்லை.

வணிக சினிமாவில் பெண்ணுடலை, முதன்மைப் படுத்துவதுதானே இன்னும் நிகழ்கிறது?

பெண்ணுடலை அணுகுவதில் நம் பார்வையும் அணுகுமுறையும் என்ன என்பதுதான் பிரச்சினை. அதேநேரம் கதைக்கும், கதாபாத்திர அமைப்புக்கும் தேவையற்ற திணிப்பாகப் பெண்ணுடலை வணிகமயம் ஆக்குவதற்கு நாம் ஆதரவு தர முடியாது. வியாபாரிகளின் உலகில் பெண்ணுடல் குறித்து விவாதிக்க இந்தத் தருணம் போதாது.

உங்கள் உடலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

என் உடலை நான் வழிபடுகிறேன். நான் அழகானவள் என்பதில் எனக்குக் கர்வம் உண்டு. நாம் ஒவ்வொருவருமே நம் உடலைக் கொண்டாடினால், இங்கே பெண்ணுடல் குறித்த பார்வை தானாக மாறிவிடும். பார்ப்பவர்களின் பார்வையில் கள்ளம் இருக்கும் என்பதற்காக நாம் கதாபாத்திரங்களை ஒடுக்கக் கூடாது. கதைக்குத் தேவையெனில் கண்களை உறுத்தாத கிளாமரில் நடிப்பதில் தவறில்லை.

முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் நேரத்தில் ‘டி டே’ ஹிந்திப் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கும் தைரியம் எப்படி வந்தது?

என் கதாபாத்திரமும், என்னைச் சுற்றி நிகழும் கதையின் கட்டமைப்பும்தான் அந்தக் கதாபாத்திரத்தை நான் ஏற்றுக்கொள்ளக் காரணம். அந்தப் படத்தில் அத்தனை அழகான காதல் இருந்தது. அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக இயக்குனர் திரைக்கதை அமைத்திருந்தார். ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கதை கேட்கும்போதே உணர்ந்துவிட்டால், பிறகு யோசிக்க வேண்டிய தேவை இருக்காது.

என் கதாபாத்திரமும், என்னைச் சுற்றி நிகழும் கதையின் கட்டமைப்பும்தான் அந்தக் கதாபாத்திரத்தை நான் ஏற்றுக்கொள்ளக் காரணம். அந்தப் படத்தில் அத்தனை அழகான காதல் இருந்தது. அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக இயக்குனர் திரைக்கதை அமைத்திருந்தார். ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கதை கேட்கும்போதே உணர்ந்துவிட்டால், பிறகு யோசிக்க வேண்டிய தேவை இருக்காது.

உங்களைப் பற்றிய தவறான செய்திகள் வரும்போது மீடியாவை எப்படி எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்?

இது அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்ட துணிச்சல். மடியில் கணம் இருந்தால்தானே வழியில் பயம்? ஆனால் ஒரு எல்லையைக் கடந்து எழுதும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதேபோல என்னை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளில் எந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கலாம், எதற்குப் பதில் அளிக்க விரும்பவில்லை என்ற உரிமை முழுமையாக என்னிடமே உள்ளது.

தீபாவளியை எங்கே கொண்டாட இருக்கிறீர்கள்?

மும்பையில். அம்மா , தங்கையுடன் இப்போதே கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x