Last Updated : 25 Feb, 2014 03:35 PM

 

Published : 25 Feb 2014 03:35 PM
Last Updated : 25 Feb 2014 03:35 PM

வேண்டா வெறுப்போடு இயக்குநரானவன் நான்: இயக்குநர் மகேந்திரன்

வேண்டா வெறுப்போடு இயக்குநரானவன் நான் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மகேந்திரன் கூறினார்.

'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களை இயக்கியவர் மகேந்திரன். இவரது இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்து இருக்கிறார்.

மகேந்திர இயக்கத்தில் கடைசியாக வெளியான 'சாசனம்' படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை. தற்போது மீண்டும் இணையும் இயக்குநர் மகேந்திரன் - இளையராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அச்சந்திப்பில் இயக்குநர் மகேந்திரன் பேசியது, "முடிந்த வரைக்கும் மனித உணர்வுகள் சிதைந்துவிடாமல் படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவன் நான். அந்த வகையில் புதுமைப்பித்தன் சிறுகதையில் வரும் சில வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன. அதையே களமாக வைத்து இப்போது புதிய படத்தை இயக்குகிறேன். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதை இளையராஜாதான் வைப்பார். என்னுடைய ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கு தலைப்பு வைத்ததே ராஜாதான்.

சில கம்பெனிகள் என்னை படம் எடுக்கச் சொல்லி நீண்டகாலமாக கேட்டு வருகின்றன. கூடவே சில சமரசங்களையும் திணிக்கிறார்கள். நான் எப்போதுமே சமரசத்துக்கு உடன்படுவது இல்லை. என்னோட கிறுக்குத்தனமான இந்தக் கொள்கைக்கு இப்போது படம் பண்ணும் தயாரிப்பு தரப்பினர் கட்டுப்பட்டனர். காம்ப்ரமைஸ் எதுவும் வைக்கவில்லை. உடனே படம் பண்ண ஒப்புக்கொண்டேன்.

நானும் ராஜாவும் இணையும்போது ஹிட் சாங் கொடுத்தே ஆக வேண்டும் என்று திட்டத்தோடு இறங்குவதில்லை. மறக்க முடியாத பாடல்கள் அதுவாக அமைந்துவிடும். இன்னும் நல்ல அனுபத்தோடு படம் எடுக்க வேண்டும் என்பதால்கூட எனக்கு கொஞ்சம் இடைவெளி அமைந்ததோ என்றே நினைக்கிறேன். எல்லோருக்கும் சினிமா காதல் திருமணமாக அமைந்தது. எனக்கோ இது கட்டாயத் திருமணமே. வேண்டா வெறுப்போடு இயக்குநரானவன் நான்.

கடந்த 7, 8 ஆண்டுகளாக உலகப்படங்கள் நிறைய பார்த்து வருகிறேன். இன்னும் இன்னும் அழகான சினிமாவை கொடுத்திருக்கலாமோ என்றே இந்த இடைவெளி எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. நல்ல அனுபவத்தோடு மனித உணர்வுகளின் மேல் கவனம் செலுத்தும் படைப்பாக இது இருக்கும்." என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசும்போது, ‘‘தனித்தன்மையான படங்களை கொடுத்தவர் பாலுமகேந்திரா. அந்த இடம் மகேந்திரனுக்கும் உண்டு. இப்போது அவர் சொல்ல வரும் கதையும் தனித்தன்மையோடு அமையும். அதுவும் மகேந்திரனுக்குரிய தனித்தன்மையோடு அமையும். புதிதாக நாங்கள் வேலை செய்பவர்கள் அல்ல. ஏற்கெனவே பழக்கப்பட்டவர்கள். ஆகவே எல்லாமும் இயல்பாக அதுவாகவே அமையும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x