Published : 16 Oct 2014 11:02 AM
Last Updated : 16 Oct 2014 11:02 AM

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னை மாநகர வாக்காளர் எண்ணிக்கை 37.76 லட்சமாக உயர்வு

சென்னை மாநகர வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் நேற்று வெளியிட்டார். மாநகர வாக்காளர்களின் எண்ணிக்கை 37.76 லட்சமாக உயர்ந்துள்ளது.

சென்னை மாநகரத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. 1.1.2015-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 2015-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இதை பொதுமக்கள் பார்வையிட்டு, தங்கள் பெயர் இடம்பெற்றதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

1 ஜனவரி 2015-ம் ஆண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள், சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

37.76 லட்சம் வாக்காளர்கள்

வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது சென்னை மாநகரத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 37.76 லட்சமாக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் 18,84,228 ஆண் வாக்காளர்களும், 18,91,519 பெண் வாக்காளர்களும், 719 இதர வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 5-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி சென்னை மாநகரத்தில் 37.75 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இந்த முறை 1,086 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

அதிகபட்சமாக வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 2.78 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.81 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் துறைமுகம், விருகம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளைத் தவிர மற்ற 12தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. www.election.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கும் சேவையை வழங்க சென்னையில் உள்ள 40 இணையதள மையங்களுடன் மாநகராட்சி நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த முறை பொதுமக்கள் அதிக அளவில் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும் போதுமான விண்ணப்பங்கள் இருப்பில் உள்ளன.

சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமைகளான அக்டோபர் 26, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

3624 வாக்குச்சாவடிகள்

மக்களவை தேர்தல் 2014-ன் போது 3,254 வாக்குச் சாவடிகள் இருந்தன. தற்போது ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1400வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்குச் சாவடிகள் சீரமைக்கப்பட்டு கூடுதலாக 370 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து சென்னை மாநகர வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 3,624 ஆக உயர்ந்துள்ளன. இவ்வாறு விக்ரம் கபூர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x