Published : 15 Jun 2016 06:02 PM
Last Updated : 15 Jun 2016 06:02 PM

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் மறைவு

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.

ஏவி.எம் நிறுவனம் தயாரித்த ‘வீரத்திருமகன்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர். தொடர்ந்து ‘ராமு’, ‘நானும் ஒரு பெண்’, ‘அதே கண்கள்’, ‘காக்கும் கரங்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘அன்பே வா’, சிவாஜி கணேசன் நடிப்பில் ‘தங்கை’, ‘இருமலர்கள்’, ‘எங்க மாமா’ , ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அன்பே ஆருயிரே’, ‘டாக்டர் சிவா’, ‘தெய்வமகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் ‘தெய்வ மகன்’ ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்ட படம். ரஜினிகாந்த் நடிப்பில் ‘வணக்கத்துக்குரிய காதலியே’ படத்தை இயக்கியுள்ளார்.

‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் நடிகர் சிவகுமாரையும், ‘வீரத்திருமகன்’ படத்தில் நடிகை சச்சுவை கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தியவர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 65 படங்கள் இயக்கியவர். 20 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 5 முறை ஃபிலிம் பேர் விருது, கலைமாமணி விருது, திரைப்படக் கல்லூரி தலைவராக 4 முறை பொறுப்பு, தமிழ்நாடு அரசின் சிறந்த படங்களுக்கான தேர்வு குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு ஆரூர்தாஸ் கதை, வசனம் எழுதியுள்ளார். அவரது முதல் படமான ‘வீரத்திருமகன்’ படத்திலிருந்து பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் எஸ்பி.முத்துராமன் பின்னாளில் பல படங்களை இயக்கியுள்ளார். திரைப்பட விழாக்களில் தன் குருநாதர் ஏசிடி என்று எஸ்பி.முத்துராமன் பதிவு செய்யத் தவற மாட்டார். சினிமாவைத் தொடர்ந்து சின்னத்திரையில் ‘நாணயம்’ உள்ளிட்ட பல மெகா தொடர்களை தயாரித்து, இயக்கியவர் ஏ.சி.திருலோகசந்தர்.

அவரது மனைவி பாரதி தற்போது உயிருடன் இல்லை. மகன்கள் ராஜ், பிரேம். இவர்களில் பிரேம் என்ற மகன் சமீபத்தில் அமெரிக்காவில் இறந்துவிட்டார். மல்லிமகேஷ்வரி என்ற மகள் உள்ளார்.

இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானாத்தூரில் (மாயாஜால் எதிரில்) வசித்து வந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 2 மணிக்கு கானாத்தூர் வீட்டில் நடைபெறும். மாலை 4 மணிக்கு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முதல்வர் இரங்கல்

ஏ.சி.திருலோகசந்தர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் திரையுலகம் கண்ட மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். நன்கு படித்த பண்பாளர். நாகரீகமான மனிதர். படப்பிடிப்புக்கு வரும் முன்பே ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு திறம்பட இயக்கும் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர்.

திருலோகசந்தர் பெண்களை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்குவதிலும், கதாபாத்திரங் களின் குண இயல்புகளை தனக்கே உரிய சிறப்பான பாணியில் சித்தரிப்பதிலும் வல்லவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவு திரைப்படத்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x