Published : 22 Oct 2014 08:48 AM
Last Updated : 22 Oct 2014 08:48 AM

மின்வெட்டு இல்லாத தீபாவளி: மின் வாரியம் சிறப்பு ஏற்பாடு

மின் தடை நீக்கும் மையங்களில் விடுமுறை இல்லாமல், மின் ஊழியர்கள் பணியில் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவசர நிலையைத் தவிர வேறு எந்த சூழலிலும் தீபாவளி நாளில் மின் தடை செய்யக் கூடாது என்று மின் வாரிய உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முன்பு வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3 மணி நேரம் வரை மின் தடை அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ந்த வானிலை நிலவியதால் மின் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. குறிப்பாக மின் விசிறி மற்றும் குளிர்சாதனங்களின் பயன்பாடு பெருமளவில் குறைந்தது. விவசாயிகளும் பம்புசெட்களை சில நாட்களாக இயக்கவில்லை.

இதன் காரணமாக , மின் வெட்டு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு, மழையால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் இணைப்புப் பெட்டிகளில் கசிவு போன்றவற்றால் மட்டுமே மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை மின் தடை இல்லாமல் மக்கள் நிம்மதியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக மின் வாரிய அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்து, மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுதல், மின் இணைப்புப் பெட்டிகளில் கோளாறு, டிரான்ஸ்பார்மரில் கோளாறு ஏற்படுதல் போன்றவற்றால் ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இதையும் சரி செய்து, உடனுக்குடன் மின் விநியோகம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் செயல்படும், மின் தடை நீக்கும் மையங்களில் ஊழியர்கள் விடுப்பு இன்றி, 3 ஷிப்ட்களில் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். மின் தடை நீக்கும் கால் சென்டரிலும் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கால் சென்டர் மற்றும் மின் தடை நீக்கும் மையங்களில் இருக்கும் உதவியாளர்கள், பொதுமக்களின் புகார்களை தொலைபேசியில் பெற்று, உடனுக்குடன் மின் தடை நீக்கும் பிரிவினருக்கு தகவல் அளிக்க வேண்டும். போனை எடுக்காமல் இருப்பதாக புகார் வந்தால், அப்போது பணியில் இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துணை மின் நிலையங்களிலும் பணியில் இருக்கும் ஊழியர்கள் உரிய உபகரணங்களை முன் கூட்டியே இருப்புக் கிடங்கில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும், மின் தடை ஏற்படும் பகுதிகளுக்குச் செல்ல வாகனங்கள் மற்றும் டிரைவர்களை தயாராக வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்தடை ஏற்பட்டால் யாரை அணுகுவது?

மின் தடை ஏற்பட்டால், பொதுமக்கள் முதல்கட்டமாக மின் வாரிய கால் சென்டரின் 1912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அங்கு ஊழியர்கள் பணியில் இருந்து புகார்களைப் பெற்று, பகுதி உதவிப் பொறியாளர்களுக்கு அனுப்புவர். இதேபோல், அந்தந்த பகுதிகளிலுள்ள மின் தடை நீக்கும் பிரிவின் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், தங்கள் பகுதி பராமரிப்பு மற்றும் இயக்கப் பிரிவின் உதவிப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்களை அணுகலாம். மாநகராட்சியின் தெரு விளக்குகள் எரியாவிட்டால் 1913 என்ற எண்ணுக்கு போன் செய்து அழைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x