Last Updated : 10 Apr, 2017 01:25 PM

 

Published : 10 Apr 2017 01:25 PM
Last Updated : 10 Apr 2017 01:25 PM

விமர்சகர்களுக்கு விஷால் வைத்த கோரிக்கை: ரஜினி வரவேற்பு

விமர்சகர்களுக்கு விஷால் வைத்த கோரிக்கைக்கு ரஜினி வரவேற்பு தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நெருப்புடா'. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாவுள்ளார்.

'நெருப்புடா' இசை வெளியீட்டு விழா அன்னை இல்லத்தில் நடைபெற்றது. இதில் ரஜினி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், கார்த்தி, லாரன்ஸ், விவேக் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ரஜினி பேசும் போது, "இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும், முதல் படம் தயாரித்திருக்கும் விக்ரம் பிரபு வெற்றியடைய வேண்டும். இந்நேரம் சிவாஜி சார் இருந்திருந்தால் என்னுடைய தாடியைப் பார்த்து, "என்னடா எனக்கு போட்டியா?" என்று கேட்டிருப்பார். அவருக்கு போட்டி யாருமே இல்லை. இனிமேல் பிறக்கப் போவதுமில்லை.

பிரபு 100% அதிர்ஷ்டசாலி என்று சொல்கிறார்கள். அவருக்கு பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. கண்டிப்பாக இந்த பாரம்பரியம் தொடரும். 'கும்கி' படத்துக்காக விக்ரம் பிரபு பட்ட கஷ்டத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாத்தா பெயரையும், அப்பா பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அல்லவா. அதுவே கண்டிப்பாக உங்களை நல்ல இடத்துக்குக் கொண்டு போகும்.

விஷால் இங்கு ஒரு கோரிக்கை வைத்தார். அது ஒரு நல்ல கோரிக்கை. அதை நான் ஆமோதிக்கிறேன். பத்திரிகையாளர்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நினைக்கிறேன். சாப்பிட அழைத்துவிட்டு பரிமாறும் போது 'சாப்பிடுங்கள்' என்று சொல்வதற்கும் 'சாப்பிடு சாப்பிடு.. நல்லா சாப்பிடு' என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விமர்சனம் பண்ணுங்கள், ஆனால் அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளரும் அனைவருமே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை விற்க வேண்டும். நாம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் அவர்களுடைய பொருளை விற்பதற்கு பல்வேறு வகையில் ஷோ காட்டுவார்களை. அதை நம்பி வாங்கிவிட்டு நஷ்டம் அடைந்துவிட்டேன் என்று கூறுவதும் தப்பு. விநியோகஸ்தர்கள் இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்யுமா என்று முன்னணி விநியோகஸ்தர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்க வேண்டும். திரையுலகினர் அனைவருமே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும்" என்றார் ரஜினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x