Last Updated : 11 Apr, 2017 03:22 PM

 

Published : 11 Apr 2017 03:22 PM
Last Updated : 11 Apr 2017 03:22 PM

இளையராஜாவின் இசையில் மீண்டும் பாடுவேனா?- மனம் திறந்த எஸ்.பி.பி.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றிப் பாடியதற்காக இசையமைப்பாளர் இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இந்தச் சர்ச்சை குறித்து முதன் முறையாகப் பேட்டியளித்துள்ளார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்பேட்டியில் அவர் தெரிவித்திருப்பது "இளையராஜா பாடல்களைப் பாடாததால் என் மனம் பாதித்தது, ஆனால் என் நிகழ்ச்சி பாதிக்கப்படவில்லை. மற்றப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறேன்.

இளையராஜாவின் இசையில் மீண்டும் பாடுவேனா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும். அவருக்கும் எனக்கும் எந்தவொரு அபிப்பிராய வேறுபாடும் கிடையாது. நானும் அவரும் நண்பர்கள் தான். காலம் எப்படி நிர்ணயிக்கிறதோ அப்படி நிர்ணயிக்கட்டும், நடக்கும். நான் எப்போதுமே தலை நிமிர்ந்து நடந்து கொள்ள மாட்டேன். எந்தப் பாடலையும் என்னுடைய சொந்தம் என்று நினைக்க மாட்டேன்.

ஒவ்வொரு பாடலுக்குச் சொந்தக்காரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இயக்குநர் பாடலின் பின்புலத்தை விவரிப்பார், இசையமைப்பாளர் இசையைக் கொடுப்பார், கவிஞர்கள் அழகான வரிகள் எழுதுவார்கள், நாங்கள் பாடுவோம், இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் அழகாக வாசிப்பார்கள், அதை அழகாக ஒலிப்பதிவு செய்வார்கள், இயக்குநர்கள் அழகாகக் காட்சிப்படுத்த வேண்டும், நடிகர்கள் அழகாக நடிக்க வேண்டும் என ஒரு பாடலுக்குப் பின்னால் பல விஷயங்கள் இருக்கிறது. எனக்கு நல்ல பாடல்கள் கொடுத்த அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டியிருக்கிறேன்.

உண்மையில் இந்தியாவில் காப்புரிமை சட்டம் என்பது சிக்கலானது. எனக்கே நிச்சயமாக முழுமையாகத் தெரியாது. எனக்குத் தெரிந்திருந்தால் கண்டிப்பாக இளையராஜாவிடம் போன் செய்து, பாடல்களைப் பாடலாமா எனக் கேட்டிருப்பேன். அதைக் கேட்பதற்கு எனக்கு ஐயமே கிடையாது.

ஆகஸ்ட் மாதத்திலே டொரண்டோவில் நிகழ்ச்சியைத் தொடங்கினோம். அதைத் தொடர்ந்து ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், கொலம்போ ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடத்தி வருகிறோம். அமெரிக்காவில் நடக்கும் போது மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது.

அனைவருமே என்னிடம் நீங்கள் தொலைபேசியில் பேசிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரலாமே என்று கேட்கலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு சின்னத் தன்மானம் என்று ஒன்று உள்ளது. அதற்காக இளையராஜாவைக் குறைத்துப் பேசவே இல்லை. 2015ல் தான் காப்புரிமை சட்டத்தை எழுதியுள்ளார். அவரோடு சேர்ந்தும், இல்லாமலும் நிறைய நிகழ்ச்சிகளைச் செய்துள்ளேன். இதைப் பற்றி அவர் என்னிடம் சொன்னதில்லை.

எனக்குத் தெரிந்திருந்தால் இளையராஜாவிடம் கேட்பதில், எந்தவொரு வேறுபாடும் கிடையாது. வக்கீல் நோட்டீஸ் வந்ததிற்குப் பிறகு நண்பர் தானே ஏன் இப்படி நடந்தது என்று ஒரு சின்ன வலி ஏற்பட்டுள்ளது. காப்புரிமை சட்டம் இருக்கும் போது, அதைக் கேட்பதில் தவறு ஒன்றுமே இல்லை. ஆனால் எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. அவருடைய அலுவலகத்திலிருந்து கூட எனக்கு யாரும் போன் செய்யவில்லை.

எனக்கு மட்டுமன்றி என்னுடைய ஸ்பான்சர்கள், எந்த திரையரங்கில் நிகழ்ச்சிகள் செய்தோமோ அவர்களுக்கு என அனைவருக்குமே வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளது. இது ஒரு விதமான கஷ்டமாக இருக்கிறது. இப்பிரச்சினை எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது. ஆனால், இளையராஜா மீது நான் வைத்திருக்கும் மரியாதை குறையாது. இந்தியாவில் இருக்கும் அனைத்து இசையமைப்பாளர்களோடும் பணியாற்றியுள்ளேன். ஆனால், இளையராஜா ஒரு ஜீனியஸ். காலம் மட்டுமே தெளிவான நிர்ணயத்தைக் கொடுக்கும்" என்று தெரிவித்துள்ளார் பாலசுப்பிரமணியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x