Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM

"இந்திய சினிமாவை இணைக்கும் இடம் சென்னைதான்" : ஒளிப்பதிவாளர் திரு

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போய் வெற்றிக்கொடி நாட்டிய வர்கள் வரிசையில் முக்கிய மானவர் ஒளிப்பதிவாளர் திரு. அஜய் தேவ்கன், ரண்பீர் கபூர், அக்‌ஷய்குமார், சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன் என்று பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் அனை வருக்கும் தங்கள் படத்தில் திரு பணியாற்றினால் அப்படியொரு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் பி.சி ராம் பட்டறையில் இருந்து வந்த இவர், சமீபத்தில் வெளியான ‘க்ரிஷ் 3’ மூலம் இந்திய திரையுலகையே தன் ஒளிப்பதிவால் மிரளவைத்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்திருந்தவரை சந்தித்தோம்.

‘‘ஒரு இந்திப்படமோ, மலையாளப் படமோ, தமிழ்ப்படமோ அதை சிறப்பாக உருவாக்க நம் ஊரில் பல திறமையானவர்கள் இருக்கிறார்கள். இந்திய சினிமாவை இணைக்கும் தலைமை இடம் (ஹப்) சென்னைதான். அனிமேஷன், புதிய தொழில்நுட்பம் இப்படி எது வந்தாலும் உடனுக்குடன் அதை சினிமாவில் புகுத்தும் ஆர்வமான டெக்னிஷியன்கள் ஏகப்பட்ட பேர் இங்கே முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் இந்திய அளவில் நம்மால் எளிதாக பயணிக்க முடிகிறது!’’ என்று தமிழர்களின் பெருமை யைப் பற்றி சந்தோஷமாகச் சொன்னபடியே நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாரானார்.

இயக்குநர்கள், நடிகர்கள் அளவுக்கு ஒரு ஒளிப்பதிவாளர் மக்களின் மனதில் இடம் பிடிப்பதில்லையே?

அதை நாம் இயற்கையின் நியதியாகத் தான் பார்க்க வேண்டும். யார் காட்சியில் தெரிகிறார்களோ, அவர்கள்தான் மக்களிடம் பிரபலம் ஆகிறார்கள். அது ஒன்றும் தப்பில்லை. ஆரம்பத்தில் இருந்தே நல்ல டெக்னிஷியன், சினிமா சம்மந்தமான நபர்களுக்கு மட்டும்தான் அறிமுகமானவர்களாக இருக்கிறார்கள். இனியும் அப்படித்தான். இது மாறக்கூடிய நியதி அல்ல.

ஒளிப்பதிவாளர்கள் பலரும் படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார்கள். இயக்குநர் திருவை எப்போது பார்க்கலாம்?

சினிமாவில் இது இயல்பான ஒரு விஷயம்தான். ஒரு இயக்குநர், சினிமா ஒளிப்பதிவு குறித்த புரித லோடு இருப்பதும், ஒரு ஒளிப்பதிவாளர் இயக்குநர் பார்வையில் செயல்படுவதும் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவும். மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித்ரே ஒளிப்பதிவையும் கையாண்டிருக்கிறார். இன்றைக்கு நிறைய கேமரா மேன்கள் இயக்குநராவதைப் பார்க்கிறோம். எனக்கும் அது நடக்கலாம். பார்ப்போம்.

பாராட்டை அள்ளிய ஒவ்வொரு மூத்த ஒளிப்பதிவாளரும் ஒரு தனி கேமரா யுத்தியை பின்பற்றியிருக்கிறார்கள்? அதில் உங்களின் ஸ்டைல் எது?

தனி யுத்தி, ஸ்டைல், பாணி என்பதை எல்லாம் கடந்து இன்றைக்கு சினிமா அடுத்தக்கட்டத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது. எப்படி தெருக்கூத்து, நாடகம் வளர்ந்து அதில் அறிவியலும், கலையும் சேர்ந்து சினிமாவாக பரிணாமம் கண்டதோ, அந்த நிலை அடுத்த கட்டத்துக்கு போய்க்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். இங்கே நிறைய டெக்னோ புரட்சி வந்துவிட்டது. நீங்கள் ஒரு இடத்தை கடந்து போகும்போது உங்கள் கூடவோ, அருகிலோ இன்னொரு பிம்பம் போய்க்கொண்டிருக்கலாம். இயக்குநர் நம் கண் முன்பே ஒரு கதாபாத்திரத்தை பயணிக்க வைக்கலாம். அது சினிமாவின் இன்னொரு வடிவமாகக்கூட இருக்கலாம். இப்படி கற்பனை செய்துபார்க்க முடியாத நிலையை நோக்கி பயணத்தை தொடரும் சூழலில் அதெல்லாம் தாண்டி விட்டோம் என்று தானே சொல்ல வேண்டும்.

‘கிரிஷ் 3’ பற்றி?

சவால் நிறைய இருந்த படம். அதற்காகவே ஒப்புக்கொண்டேன். இந்தப்படத்துக்கு களத்தில் நேரடிப் பணிகளை விட எந்தவிதத்தில் எடுக்க போகிறோம் என்பதை திட்டமிடும் பணிகள்தான் அதிகமாக இருந்தது. ஒரு பறக்கும் காட்சி என்றால், அது இதுவரையிலும் இல்லாத காட்சியாக அமைய வேண்டும். அதற்கான முன் யோசனை யுத்தி அதிகம் தேவைப்பட்டது. அப்படி திட்டமிட்ட வேலைகளை ரித்திக் மிகவும் ரசித்தார். அந்த திட்டமிடலால் எங்களால் படப்பிடிப்பில் மிகவும் எளிதாக வேலையைத் தொடர முடிந்தது.

உங்களின் ஆரம்பம்?

ஒரு ஒளிப்பதிவாளன் ஸ்டில் போட்டோகிராஃபி யிலிருந்துதான் வருகிறான். நல்ல போட்டோ கிராஃபி கிடைக்கும்போது நமக்குள் நாம் அறியாமல் ஒரு உணர்வு தூண்டல் நடக்கும். அதேபோல ஒரு நல்ல புகைப்படம், அந்த படத்தை ரசிப்பவரால்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தப்படம் அவர்களுக்குள் ஏதோ ஒரு வகையில் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இன்னொருவர் மனதில் இருக்கும் விஷயத்தை அழகாக பிரதிபலிப்பது கலை. அப்படி ஒரு புகைப்படக்கலைஞனாக வேலையைத் தொடங்கிய பலரில் நானும் ஒருவன் என்பதை உணர்வதால் இந்த பயணம் பிடித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x