Last Updated : 03 Jan, 2014 12:00 AM

 

Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

பெருகிவரும் பவர் ஸ்டார்கள்

வட மாவட்டம் ஒன்றில் ஒரு தனியார் பேருந்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. ‘கவனமாக இருங்கள்... உங்கள் பக்கத்திலிருப்பவர் திருடராகக்கூட இருக்கலாம்’ என்று. சினிமாவின் பிறப்பிடம் என்று கருதப்படும் கோடம்பாக்கத்திலும் அப்படியொரு வாசகத்தை மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் வைக்கலாம். ‘சந்தோஷமாக இருங்கள்... உங்கள் பக்கத்திலிருப்பவர் வருங்கால பவர் ஸ்டாராகவும் இருக்கலாம்’ என்று.

தமிழ் சினிமாவில் ‘பவர் ஸ்டார்’ என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட சீனிவாசனின் வேகத்தைச் சற்று ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் கவனித்துவருகிறார்கள் நிருபர்கள். ஏடாகூடமாகப் பேசுகிறாரே என்று ஒருகாலத்தில் கருதிய அதே பத்திரிகையாளர்கள் இன்று அவரது கனவின் வேகத்தையும் அடர்த்தியையும் கண்டு மிரண்டுதான் போயிருக்கிறார்கள். “உங்களுக்குப் போட்டியாக யாரைக் கருதுகிறீர்கள்?” என்று கேட்ட நிருபர்களுக்கு “சூப்பர் ஸ்டார் ரஜினித்தான்” என்று பதிலளித்து ஓட விட்டவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

வெறும் ஜோக்கராகக்கூட இல்லை, அதற்கும் கீழே அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த அந்த கேள்வி பதில் நிமிடங்களை இப்போது நினைத்தால்கூடச் சுருக்கென இருக்கிறது. அவரும் அதே பதிலை அதற்கப்புறமும் விட்டொழித்தாரில்லை. இன்று நாளொன்றுக்கு மூன்று லட்சம் சம்பளம் கேட்கிற அளவுக்கு அவரை வளர்த்துவிட்டது எது? அவரது தன்னம்பிக்கையா? அவர் சொல்லும் வெற்றுச் சவடால் பதில்களா? நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆவாய் என்ற தத்துவத்தின் விளைவா? எது எப்படியோ, இன்று கிளம்பியிருக்கும் நவீன பவர் ஸ்டார்கள் பலருக்கு இவர்தான் முன்னோடி, ஆசான் எல்லாமே.

அப்படிப்பட்ட ஒருவர்தான் ‘வின் ஸ்டார்’ விஜி. ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடித்து தயாரித்து இயக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தின் டைட்டில் பாடலை சீர்காழி கோவிந்தராஜன்தான் பாட வேண்டும் என்று விரும்பி அழைத்துப் பாடவைத்தார் அவர். நானும் முதல்முறையாக தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படம் ‘எப்போதும் ராஜா’. என் படத்திலும் சீர்காழி கோவிந்தராஜன் பாடினால் நன்றாக இருந்திருக்கும். அன்ஃபார்சுனேட்லி சீர்காழி சார் உயிரோட இல்ல. அவர் மகன் சீர்காழி சிவசிதம்பரத்தை வைத்து பாட வச்சேன்’ என்று தன் பிரஸ் ரிலஸில் கூறியிருக்கிறார் இந்த வின் ஸ்டார். இந்தப் படத்துக்காக இந்தியாவின் முன்னணி மாடல்கள் பதினாறு பேருடன் பெங்களூரில் ஒரு நடனம் ஆடியிருக்கிறாராம்.

படத்தை எண்பது சதவீதம் முடித்துவிட்டாராம் விஜி. தற்போது ‘மக்கள் தொடர்பாளர்’ என்ற படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. “படத்தில் எனக்கு ரெண்டு ஜோடிங்கண்ணே” என்று பேச ஆரம்பிக்கிறார். “மாஸ்ல எம்.ஜி.ஆர் இடத்தையும், நடிப்புல சிவாஜி இடத்தையும் பிடிக்கணும் என்பதுதான் என்னோட லட்சியம். ஏ.வி.எம். ஸ்டுடியோவுல முதன் முறையாக சிவாஜி ‘பராசக்தி’ படத்தில் வசனம் பேசிய இடம் ஒண்ணு இருக்கு. அந்த இடத்தில் சிவாஜிக்கு சிலையே வச்சுருக்காங்க. என் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முதல் நாள் இரவு நான் அந்த இடத்தில் நின்றுதான் என் வசனத்தை பேசிப் பார்த்தேன்” என்கிறார்.

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘நேசம் நெசப்படுதே’ படத்தின் இயக்குநரும் நடிகருமான ராஜசூரியனின் கெட்டப்பும், ஸ்டைலும் ‘யாரையும் விட்றதா இல்ல’ என்ற விதத்தில் இருந்தன. “என்னுடைய படம் வெளியாகிற நேரத்தில் கமலோட ‘விஸ்வரூபம்’ படம் போட்டியா வந்திருச்சுங்க. இல்லேன்னா 100 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியிருப்பேன். சென்னையில் கிருஷ்ணவேணி, உதயம்னு நாலு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணினேன். படத்தை எடுக்கிற கடைசி நாளன்னிக்கு கூட 420 பேர் படம் பார்த்தாங்கன்னா பாருங்க” என்கிறார்.

படத்தில் ஐந்து பாடல்களையும் ஐந்தே நிமிடத்தில் எழுதினாராம். “இப்பல்லாம் என்னங்க பாட்டு எழுதுறாங்க? எங்கிட்ட ட்யூனை கொடுக்க சொல்லுங்க. ஒரு பாட்டுக்கு ஒரு நிமிஷத்துக்கு மேல எடுத்துகிட்டா எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க” என்றவர், பாடிக்காட்டவே ஆரம்பித்துவிட்டார். ‘சாதி மதம் அழியணும் சார் நாட்டுல... அதுக்கு காதலிச்சு தாலி கட்டணும் வீட்டுல... ’ன்னு பாட்டு எழுதியிருக்கேன். என்னை மாதிரி யாராவது படம் எடுக்க சொல்லுங்க பார்ப்போம். என்னோட படத்துல ஹீரோயின் முந்தானை விலகி ஒரு சீன் பார்க்க முடியாது. ஹீரோவும் ஹீரோயினும் தொட்டுக்கவே மாட்டாங்க. அடுத்த படத்துக்கு ‘தெரியாமலும் புரியாமலும்’னு தலைப்பு வச்சுருக்கேன். சமுதாயத்தை திருத்தாம விடமாட்டேன்’ என்கிறார் ஆவேசத்தோடு.

‘முதல் மாணவன்’ பட ஹீரோவும் ‘கோல்டு ஸ்டார்’ என்ற பட்டப் பெயரைச் சுமந்துகொண்டேதான் வந்திருக்கிறார் தொழிலுக்கு. இவரது பெயர் கோபி காந்தி. “எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். குடும்பத்துல எல்லாருக்கும் சாக்கு தைக்கிற வேலை. சினிமாவுல ஹீரோவாகணும்ங்கற ஆசை மட்டும் மனசு பூரா இருக்கும். மாசத்துல ரெண்டு நாள் சொல்லாம கொள்ளாம கிளம்பி சென்னைக்கு வந்துருவேன். எல்லா சினிமா கம்பெனிக்கும் போயிருக்கேன். ஷங்கர் ஆபிஸ்லகூட போட்டோ கொடுத்துட்டு வந்திருக்கேன். யாரும் கூப்பிட்டதில்ல. ஆனா அதுக்காக லட்சியத்தை விட்ற முடியுமா?” என்று கேட்கிறார் ‘கோல்டு ஸ்டார்’.

சொந்தப் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் இவருக்குப் பணம் புரட்ட உதவியதே “சாக்கு யாவாரம்”தானாம். இந்த படத்தில் மாணவராக நடிக்கிறார். “என்னோட படத்தை ஒவ்வொரு ஸ்கூல்லையும் காலேஜ்லயும் காட்டுனா போதும். யாரும் சண்டை வம்புக்குன்னு போகவே மாட்டாங்க. மாணவர் சமுதாயத்தை திருத்துறதுக்கு என்னோட படம் பெரிய கருவியா இருக்கும். பஸ் டே கொண்டாடுறதுக்கு முன்னாடி என் படத்தை பார்த்துட்டு பஸ்ல ஏற சொல்லுங்க. அது போதும்” என்கிறார்.

பெரும்பாலான புதிய நடிகர்களுக்குத் தொழில் ரியல் எஸ்டேட். அதில் கிடைக்கும் லாபத்தில் படம் எடுக்கிறார்கள். நடிக்கிறார்கள். கடைசியில் போட்ட குத்தாட்டம் மட்டுமே பலன் என்று படத்தைக் கட்டி மூலையில் போட்டுவிட்டு மறுபடியும் சொந்தத் தொழிலுக்கு ஓடிவிடுகிறார்கள்.

திடீரென்று தயாரிப்பாளரான தூத்துக்குடிகாரர் ஒருவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். நடிக்கிற ஆசையில் படத்தில் வரும் இளம் நடிகையுடன் ஒரு குத்து டான்ஸ் ஆடிவிட்டார். இவரது போதாத நேரம் படம் ஒரு ஷோகூட ஓடவில்லை. வீட்டுக்குள்ள வா, வச்சுக்கறேன் என்று ஐம்பது வயது மனைவி இவருக்கு எச்சரிக்கை விட, கடந்த ஆறு மாதமாக வீட்டுக்கே போகாமல் சென்னையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார். மறுபடியும் படம் எடுத்துத் தன்னை நிரூபிக்க வேண்டுமாம்.

ஜே.கே.ரித்திஷ் ‘கானல் நீர்’ படத்தில் அறிமுகமாகும்போது கமுக்கமாகச் சிரித்தவர்கள், அவர் எம்.பி.யாகி நாடாளுமன்றத்திற்குப் போனபோது, சர்வ சந்தேகங்களையும் ஃபெவிக்கால் கொண்டு பூசிக்கொண்டார்கள். தன் படத்தைப் பார்க்க வந்தவர்களுக்கு அவர் தந்த அன்பளிப்புகளும், இலவச டிக்கெட்டும் தேர்தல் நேரத்தில் அவருக்கு எப்படியெல்லாம் உதவியது என்பதை மட்டும் மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் பின்னால் வரும் தொண்டரடிப்பொடியார்கள்.

கோடம்பாக்கம், வடபழனி, சாலிக்கிராமம் பகுதிகளில் எந்த டீக்கடைகளில் அமர்ந்திருந்தாலும், அங்கே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று எல்லா வேலைகளையும் ஒற்றை பைண்டிங் புக்குக்குள் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிற எவரையாவது பார்க்க முடிகிறது. அவ்வப்போது நடைபெறும் பட பூஜைகளில் பயங்கர மேக்கப்பிலும் டிஜிட்டல் எஃபெக்டிலும் பேசிக் கொண்டிருக்கும் இவர்களிடம், ‘இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவீங்களா?’ என்று எக்குதப்பாக கேட்டு ஒளிபரப்பவும் சினிமா இணையதளங்களின் கேமிராக்கள் தயாராக இருப்பதால், மிகுந்த உற்சாகமாகவே நடத்துகிறார்கள் இத்தகைய பூஜைகளை.

சிலரால் ஆடியோ ரிலீஸ் வரைக்கும்தான் வளர முடிகிறது. சொந்த பந்தங்களோடு நின்று சிரிக்க சிரிக்க போஸ் கொடுப்பதோடு முடிந்துவிடுகிறது அந்த அதிர்ஷ்டமும். அதையும் தாண்டி தியேட்டருக்கு வரவும், பிரியாணி பொட்டலங்களைக் கொடுத்து ரசிகர்களை வளைக்கவும் முடிகிறவர்களுக்கு மட்டுமே பவர் ஸ்டார் பட்டங்கள் நிலைக்கின்றன.

இந்த வியத்தகு பயணத்தை ஜன்னலுக்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டேயிருக்கிறார் நமது ரசிக சிகாமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x