Published : 25 Oct 2013 11:47 am

Updated : 06 Jun 2017 12:38 pm

 

Published : 25 Oct 2013 11:47 AM
Last Updated : 06 Jun 2017 12:38 PM

எக்காலத்திலும் என் இசை காற்றில் கலந்திருக்கிறது

இளையராஜாவின் மெலடி பாடல்களுக்குப் பிறகு, 90களில் மெலடி பாடல்களுக்கு என்று தனி அடையாளத்துடன் இசையமைக்க ஆரம்பித்தவர் வித்யாசாகர். 12 வயதில் இருந்து தமிழ்த் திரையிசை உலகில் பங்காற்றி வரும் இவர், இன்றைக்கு தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். மூத்த இயக்குநர்களின் படங்களில் ஆரம்பித்து, தமிழின் முன்னணி நடிகர்களுக்கு மரபிசை சார்ந்த தனது இசைக்கோவைகளால் மெருகூட்டியவர். “ஜன்னல் ஓரம்” படத்தின் ஆடியோ வெளியீட்டை முன்னிட்டு அவரிடம் பேசியதில் இருந்து:

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இசையமைத்திருக்கிறீர்கள். ஆனால், உங்கள் முதல் படம் குறித்த சரியான தகவல் இல்லையே!


நான் அறிமுகமானதே தமிழ் படத்தில்தான். 1989இல் இயக்குநர் ராஜேசகர் இயக்கிய 'பூமணம்' தான் எனது முதல் படம். 'பாலைவனச் சோலை' இயக்கிய ராபர்ட் - ராஜசேகர் இரட்டை இயக்குநர்களில் ஒருவர் அவர்.

உங்களுடைய இசையில் “மலரே மவுனமா” (கர்ணா) தனி இடத்தைப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்துக்கு இசையமைத்த அனுபவம் பற்றி...

உண்மையில் “மலரே மவுனமா” கர்ணாவுக்காக உருவாக்கப்பட்ட பாடலே அல்ல. அது ஒரு தெலுங்கு படத்துக்காக நான் கம்போஸ் செய்தது. அந்தப் படத்தில் அது இடம்பெறாத நிலையில், அர்ஜுன் இயக்கிய 'ஜெயஹிந்த்' படத்துக்குக் கொடுத்தேன். ஆனால், அதை தனது அடுத்த படத்துக்கு “ரிசர்வ்” செய்துகொள்வதாக அர்ஜுன் சொன்னார். 'கர்ணா'வில் அது இடம்பெற்ற பின், யார் இந்த வித்யாசாகர் என்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த பாடலாக அது மாறியது.

அர்ஜுன், விஜய், தரணி, கரு. பழனியப்பன் போன்றவர்களுடனான உங்கள் கூட்டணி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அது பற்றித் தனிப்பட்ட முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குறிப்பிட்ட நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து நிறைய வெற்றிகளைத் தருவதற்குக் காரணம் படத்தில் பணிபுரிபவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆவதுதான். என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு மாதிரி இசையமைப்பேன். இசையைக் கேட்கும்போதே, இது இந்த இயக்குநரின் படம் என்று சொல்லும்படியாகதான் என் இசை இருக்கும். தரணிக்கு ஃபாஸ்ட் பீட் பாடல்கள்தான் பிடிக்கும். கரு. பழனியப்பனைப் பொருத்தவரை, பெரிதாக டிமாண்ட் செய்ய மாட்டார். 'பார்த்திபன் கனவு' படத்தில் எல்லாமே வித்தியாசமான பாடல்கள். அதற்குக் காரணம், அப்படிப்பட்ட பாடல்கள் அமைய படத்தில் நிறைய சந்தர்ப்பங்கள் அமைந்ததுதான்.

உங்களுடைய லேட்டஸ்ட் படமான ஜன்னல் ஓரம் பற்றி...

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எங்கள் கூட்டணியில் வெளியான முந்தைய பாடல்கள் இசைக்கப்பட்டபோது ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு அற்புதமாக இருந்தது. ஜன்னல் ஓரம் படம் ரொம்ப வித்தியாசமான தளம். அதற்கு ஏற்ப பாடல்களும் வித்தியாசமாகவே வந்துள்ளன.

தமிழில் ரன், சந்திரமுகி போன்ற மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்தி ருக்கும் நீங்கள் இளையராஜா, ரஹ்மான் வரிசையில் மிக முக்கியமான இசையமைப்பாளர். ஆனால் தமிழில் அடிக்கடி இடைவெளி எடுத்துக் கொண்டதுபோல இருக்கிறதே...

அந்த இடைவெளி என்னால் உருவானதல்ல. இயக்குநர்களுக்கு வேறு வகையான இசை தேவைப்படும்போது, மற்றவர்களிடம் செல்கின்றனர்.

1996 முதல் மலையாளப் படம் செய்து வருகிறேன். இன்றைக்கும் அங்கே தொடர்ந்து படங்கள் செய்கிறேன். மலையாளத் திரையுலகில் எனது இசைக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அங்கே டிரெண்ட் செட்டராக எனது இசை பார்க்கப்படுகிறது. ஒரு படம் செய்தாலும் வருடம் முழுவதும் அந்தப் படத்தின் பாடல்கள்தான் எங்கும் ஒலிக்கும்.

எந்தக் காலத்திலும் எனது பாடல்கள் பிரபலமாகாத சூழ்நிலையில், தமிழில் எனக்கு இடைவெளி ஏற்பட்டதில்லை. தில், தூள், ரன், கில்லி, அன்பே சிவம் என்று பட்டியலிட்டால், அத்தனை படங்களும் மியூசிக்கல் ஹிட்தான். ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் என்ற விஷயம், எனது காலத்துக்கு முன்பு இருந்தது. அதன் பிறகு ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆவது, என்னுடைய தனித்தன்மை என்று நினைக்கிறேன்.

மெலடிதான் உங்கள் கோட்டை, உங்களுக்குப் பிடித்த மெலடி பாடல்கள் பற்றிச் சொல்லுங்களேன்...

ஒரு பாடல் என்று குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. இளையராஜாவின் கணக்கற்ற மெலடி பாடல்கள் பிடிக்கும். எம்.எஸ்.வியின் பாடல்கள் எனது மனதுக்கு நெருக்கமானவை. அவரை குருவாகக் கருதுகிறேன்.

தற்போது மெலடி பாடல்கள் குறைந்து விட்டனவே. அதற்கு யார் காரணம் இயக்குநர்களா, இசையமைப்பாளர்களா?

இதற்கு இசையமைப்பாளர்கள்தான் பொறுப்பு என்று சொல்வேன். அவர்கள் இயக்குநர்களிடம் எடுத்து சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை “நான்கு பாடல்கள் உங்கள் விருப்பம் என்றால், ஒரு பாடல் எனது விருப்பம்” என்று இயக்குநர்களிடம் சொல்லிவிடுவேன். நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற மெலடிகள் தற்போது வரவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சில குறிப்பிட்ட பாடகர்கள் உங்கள் இசையில் அதிகம் பாடுகிறார்களே...

ஆமாம். சில பாடல்களை சிலர் குர லில் கேட்டால் நன்றாக இருக்கும் என நினைப்பேன். அதனால்தான் அவர்களை திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறேன். ஆனால், நிறைய புதிய குரல்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். 'அரசியல்' படத்தில் இந்துஸ்தானி பாடகி சுபா முத்கலை அறிமுகப்படுத்தினேன். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் பார்த்துத்தான் தமிழுக்கு அவரை அழைத்து வந்தேன்.

இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி...

'16 வயதினிலே' படத்தில் இருந்து அவரது இசைக்குழுவில் பணியாற்றினேன். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் நடந்தபோது, இடைப்பட்ட நேரத்தில் எங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார். நான் பவுலிங் போடும்போது 'பந்தை மெதுவா வீசுடா' என்று வேடிக்கையாகச் சொல்வார். இப்போதும் அவர் அமைத்த பின்னணி இசைக் கோவைகளில் நான் இசைத்த பகுதிகள் வரும்போது, பழைய நினைவுகள் மனசுக்குள் ஓடும். அதை நினைத்து சிலிர்த்துப் போவேன்.

இசையமைப்பாளர் வித்யாசாகர்ஜன்னல் ஒரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x