Published : 26 Sep 2018 04:24 PM
Last Updated : 26 Sep 2018 04:24 PM

வச்சா குடுமி... அடிச்சா மொட்டை: ‘பிக் பாஸ்’ பரிதாபங்கள்

வச்சா குடுமி... அடிச்சா மொட்டை என்கிற ரேஞ்சுக்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வெளிநாடுகள் மற்றும் வட இந்தியாவில் புகழ்பெற்ற ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ, கடந்த வருடம் தென்னிந்தியாவுக்கும் அறிமுகமானது. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 100 நாட்கள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது இந்த ஷோவின் பொது விதி.

ஸ்ரீ, அனுயா, வையாபுரி, காயத்ரி ரகுராம், பரணி, ரைஸா வில்சன், சினேகன், ஓவியா, ஹார்த்தி, ஆரவ், கஞ்சா கருப்பு, ஜூலி, கணேஷ் வெங்கட்ராமன், ஷக்தி, நமிதா ஆகிய 15 பேரும் போட்டியாளர்களாக முதல் நாள் களம் இறக்கப்பட்டனர். பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண், காஜல் பசுபதி ஆகிய நால்வரும் இடையிடையே ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.

இதில், சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் கல்யாண் ஆகிய 4 பேரும் இறுதிப்போட்டிக்குத் தேர்வு பெற்றனர். ஆரவ் டைட்டில் வின்னராகத் தேர்வுபெற, சினேகன் ரன்னரானார். ஹரிஷ் கல்யாணுக்கு மூன்றாமிடமும், கணேஷ் வெங்கட்ராமனுக்கு நான்காமிடமும் கிடைத்தது.

மொத்தம் பங்கேற்ற 19 போட்டியாளர்களில், 10 பேர் பெண்களாக இருந்தும், ஒருவர் கூட இறுதிப்போட்டிக்குத் தேர்வு பெறாதது, சர்ச்சையைக் கிளப்பியது. ‘பிக் பாஸ்’ ஆண்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது சீஸனில், இறுதிப் போட்டியாளர்கள் நான்கு பேருமே பெண்களாக இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார் ‘பிக் பாஸ்’. ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும்தான் இறுதிப் போட்டியாளர்கள்.

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், பாலாஜி, மமதி சாரி, நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய 16 பேரும் ‘பிக் பாஸ் 2’ ஷோ முதல் நாளில் போட்டியாளர்களாகக் களமிறக்கப்பட்டனர். இடையில் விஜயலட்சுமியும் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

இந்த முறையும் 10 பெண் போட்டியாளர்கள் கலந்துகொள்ள, ஆண் போட்டியாளர்கள் ஏழு பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த ஏழு பேரில் ஒருவர் கூட இறுதிப்போட்டிக்குச் செல்லவில்லை. இதுவும் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. ஒன்று மொத்தமாக ஆண்களாக இருப்பது அல்லது மொத்தமாகப் பெண்களாக இருப்பது போன்று ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை ஏன் வடிவமைத்தனர் எனத் தெரியவில்லை.

‘வச்சா குடுமி... அடிச்சா மொட்டை’ என ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படி ஒரே பக்கமாக ‘பிக் பாஸ்’ சாய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண் - பெண் சமத்துவம் பேசிக் கொண்டிருக்கும், ஆணுக்கு நிகராகப் பெண்ணும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இத்தனைக்கும் சமத்துவத்தை வலியுறுத்தும் கமல்ஹாசன் இந்த ஷோவின் தொகுப்பாளராக இருந்தும் இப்படியெல்லாம் நடப்பது ஏன்? என்று அடுக்கடுக்காகப் பல கேள்விகள் எழுகின்றன. எல்லாவற்றுக்கும் ‘பிக் பாஸ்’ தான் பதில் சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x