Published : 20 Sep 2018 07:08 PM
Last Updated : 20 Sep 2018 07:08 PM

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு வெளியீடு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் ஆ.பிரியதர்ஷினி. படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.

“ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு, அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும்... அந்தக் களத்தை மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளைத் தகர்த்துக் காட்டி, என்றும் வழிகாட்டியாய் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பதற்கான பணிகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு பெண்ணாக, வரலாறு கண்ட மாபெரும் தலைவியின் வரலாற்றை இயக்குவதற்கான இந்த வாய்ப்பை பெருமையாக நினைப்பதைக் காட்டிலும், கடமையாக உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது” என ஏற்கெனவே தெரிவித்தார் பிரியதர்ஷினி.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று (செப்டம்பர் 20) வெளியிடப்பட்டுள்ளது. ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, விஜய் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x