Published : 25 Sep 2018 04:05 PM
Last Updated : 25 Sep 2018 04:05 PM

பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்

பட்ட சிரமத்திற்குப் பலன் கிடைத்திருக்கிறது என ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) ரிலீஸாக இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர் - ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

‘பரியேறும் பெருமாள்’ குறித்துப் பேசிய ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. நான் பிறந்து, வளர்ந்தது சென்னை தான். எனக்கு கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்துக் கதை சார்ந்த படம்தான்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் என்னைப் புதிதாக இயங்க வைக்கின்றன. எனக்குச் சில எழுத்தாளர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குநர் மாரி செல்வராஜ் .

‘பரியேறும் பெருமாள்’ கதையைக் கேட்டவுடன், இந்தக் கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல், கொஞ்சம் மெனக்கட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பகுதிகளில் நடைபெற்றது. அந்த ஊர்களின் பசுமை, வறட்சிப் பகுதிகள், தெருக்கள், வெயில் மனிதர்கள், விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேண்டும், கூடவே அழகியலும் இருக்க வேண்டும் என்ற ஆசை.

கதைக்களம், அதன் வேகம் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க, கிம்பல் எனும் தொழில்நுட்பத்தைப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். 40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களைத் தோளில் சுமந்துகொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும், படம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட சிரமத்திற்குப் பலன் கிடைத்திருக்கிறது.

கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாகமூட்டியதும், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் ஒத்துழைப்பும், சவாலான வேலையைச் செய்துமுடிக்கப் பெரும் உதவியாக இருந்தது.

எந்த இடத்திலும் அந்த நிலத்தின் நிறம் மாறாமல், அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றன. அவற்றைப் படம் பிடிக்க கிம்பல் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான படமாக ‘பரியேறும் பெருமாள்’ வந்திருக்கிறது. திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் அழகையும் இந்தப் படத்தில் பெரிதும் எதிர்பார்க்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x