Published : 02 Sep 2014 10:16 AM
Last Updated : 02 Sep 2014 10:16 AM

செவிலியரும் இல்லை, விளக்கும் இல்லை: இருளில் வெறும் தரையில் இளம்பெண்ணுக்கு பிரசவம்- துணை சுகாதார நிலையத்தில் அவலம்

நல்லம்பள்ளி அருகே துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் இல்லாத நிலையில் இருளில் பொதுமக்கள் உதவியுடன் இளம்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள் ளது. இங்கு தங்கியிருந்து முழுநேர மும் பணியாற்றி வந்த செவிலியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். அதன்பின்பு 4 மாதங்களாக செவிலியர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஈச்சம்பட்டியை அடுத் துள்ள முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி என்பவரின் மனைவி செம்பருத்திக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் செம்பருத்தியை ஈச்சம் பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு இரவு 7.15 மணியளவில் இரு சக்கர வாகனம் மூலம் அழைத்து வந்துள்ளனர். அங்கு செவிலியர் இல்லாததால் செம்பருத்தியுடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் பிரசவ வலி அதிகரித்ததால் துணை சுகாதார நிலையத்தின் வாசலிலேயே அவரை தரையில் கிடத்தியுள்ளனர். அங்கு விளக்கு வெளிச்சமும் இல்லை. அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரின் உதவியுடன் செம்பருத்திக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு இரவு 7.50 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

செவிலியரும் இல்லாமல், துணை சுகாதார நிலைய வாசலில் விளக்கு வெளிச்சமும் இல்லாத ஆபத்தான நிலையில் இளம்பெண் செம்பருத்திக்கு நடந்த பிரசவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது: ‘மலை கிராமங்கள் சூழ்ந்த எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் பிரசவம், விஷக்கடி உள்ளிட்ட அவசர சூழல்கள் ஏற்பட்டால் முதலுதவிக்கு கூட வழியில்லை. செம்பருத்திக்கு ஏதாவது விபரீதம் நிகழ்ந்திருந்தால் அந்த குடும்பத்தின் நிலை என்னவாகி இருக்கும். எனவே எங்களின் நிலையுணர்ந்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஈச்சம்பட்டி துணை சுகாதார நிலையத்துக்கு புதிதாக செவிலியர் ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த சம்பவத்தை தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது, ‘மாவட்டத்தில் பரவலாக ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் சில துணை சுகாதார நிலையங்களில் இதுபோன்ற நிலை உள்ளது. இந்த சம்பவத்தை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்று ஈச்சம்பட்டி துணை சுகாதார நிலையத்துக்கு செவிலியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x