Published : 10 Jun 2019 03:46 PM
Last Updated : 10 Jun 2019 03:46 PM

கிரேசி மோகன் மறைவு: துணை முதல்வர் ஓபிஎஸ், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

கிரேசி மோகன் மறைவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.

‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை மட்டுமின்றி, அரசியல் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு, ஓ.பன்னீர்செல்வம், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்த கதை, வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

“பிரபல நகைச்சுவை நடிகரும் வசனகர்த்தாவுமான அருமை நண்பர் கிரேசி மோகன் மறைந்துவிட்டார். அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் எச்.ராஜா.

“தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த நடிகர் கிரேசி மோகன் மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். அவரின் இழப்பு, மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

தமிழ்த் திரையுலகில் கதை - வசனகர்த்தாவாகவும் நடிகராகவும் பணியாற்றியவர் கிரேசி மோகன். இதுதவிர, நாடக ஆசிரியராகவும் பணியாற்றி, பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். எண்ணற்றத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி, தன்னுடைய நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவைத் தாங்கும் வலிமையை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்” என இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x