Published : 23 Jun 2019 03:10 PM
Last Updated : 23 Jun 2019 03:10 PM

தண்ணீர்ப் பஞ்சத்தை மறைக்கவே நடிகர் சங்கத் தேர்தல்: மன்சூரலிகான் குற்றச்சாட்டு

தண்ணீர்ப் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்கத் தேர்தல் பயன்படுகிறது என மன்சூரலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், ஓட்டு போட்டபின் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார் மன்சூரலிகான். அவரிடம், இதற்கு முன்னால் நிர்வாகத்தில் இருந்த விஷால் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? என கேள்வி எழுப்பப்பட்டது.

“நிலத்தை மீட்கும் போராட்டத்தில் நானும் விஷால் அணியில் இருந்தேன். அந்தச் சமயத்தில் ஆதங்கத்தால் விஷால் அணிக்கு நிறைய வாக்குகள் கிடைத்து, பதவியில் அமர்ந்தனர். கொஞ்சம் அதிகமாக அதிருப்தியைச் சம்பாதித்துள்ளனர். மற்றபடி அவர்களும் கடுமையாக உழைத்துள்ளனர்.

இதைக் கட்டிடமாக நான் பார்க்கவில்லை. நீங்களும் அப்படிப் பார்க்கக்கூடாது. இது கோயில். கோயில் என்பது எல்லோரிடமும் மடிப்பிச்சை வாங்கித்தான் கட்ட வேண்டும். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். விஷால் மட்டும்தான் நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

அத்துடன், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என எல்லாக் கலைஞர்களின் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும். ஒரு தாய், தன்னுடைய நான்கு குழந்தைகளையும் அரவணைத்துச் செல்வது போலத்தான் நடிகர் சங்கத்தின் லோகோவே இருக்கிறது. எனவே, இதை யாரும் கட்டிடமாகப் பார்க்காமல், கோயிலாகப் பார்க்க வேண்டும். கட்டிடத்தை அடமானம் வைக்கலாம். ஆனால், இதை யாரும் அடமானம் வைக்கக்கூடாது. இதன்மீது கடனும் வாங்கக்கூடாது” என அதற்குப் பதில் அளித்தார் மன்சூரலிகான்.

இந்தத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே... என்ற கேள்விக்குப் பதிலளித்த மன்சூரலிகான், “தண்ணீர்ப் பஞ்சத்தை மறைக்கக் கொஞ்ச நாள் பா.இரஞ்சித் பயன்பட்டார். தற்போது இந்தத் தேர்தல் பயன்படுகிறது. எல்லாரும் யாகம் வளர்க்கின்றனர். பார்க்க சிரிப்பாக வருகிறது. காமெடி என்னன்னா, எல்லோரும் மாலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர். அதைப் பார்த்துட்டு வந்த மழையும் ஓடிப்போய் விட்டது” என்றார் சிரிப்புடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x