Published : 09 Jun 2019 07:57 AM
Last Updated : 09 Jun 2019 07:57 AM

திரை விமர்சனம்: கொலைகாரன்

ஒரு மைதானத்தில் பாதி எரிந்த நிலையில் உள்ள சடலத்தை கைப்பற்றுகிறது சென்னை காவல் துறை. கொலை செய்யப்பட்டவர் தெலங்கானா மாநில அமைச்சரின் தம்பி என்று தெரியவருகிறது. காவல் ஆய்வாளர் அர்ஜுனிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. அவர் தீவிர புலன் விசாரணையை தொடங்குகிறார்.

இளம்பெண் ஆஷிமா நார்வல் (கதாநாயகி), அவரது அம்மா சீதா, அவர்களது எதிர்வீட்டில் வசிக்கும் விஜய் ஆன்டனி ஆகிய 3 பேர் மீது அர்ஜுனுக்கு சந்தேகம் எழுகிறது. வெளிமாநில இளைஞர் கொல்லப் பட்டதன் முழுமையான பின்னணி என்ன? அந்த கொலைக்கும் விஜய் ஆன்டனிக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? இதுபற்றிய விசாரணையை அர்ஜுன் சரியான பாதையில் நகர்த்தினாரா? இந்த கேள்விகளுக்கான விடையே ‘கொலைகாரன்’ படத்தின் மீதிக் கதை.

‘தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ (The Devotion of Suspect X) என்ற ஜப்பானிய நாவலின் தழுவல் கதையை, காட்சி வழியாகவும் ஒரு நாவல் போலவே அடுக்கடுக்கான மர்மங்களோடு, சுவாரஸ்யம் குறை யாமல் தந்திருக்கிறார் இயக்கு நர் ஆன்ட்ரூ லூயிஸ். காவல் அதி காரியாக அர்ஜுன் முன்னெடுக்கும் ஒவ்வொரு விஷயமும் சிறப்பு. அதேபோல, விசாரணை நேரத் தில் ஒரு மன ஓட்டத்திலும், குற் றத்தை ஒப்புக்கொள்ளும் நேரத் தில் வேறொரு மனிதராகவும் விஜய் ஆன்டனி கதாபாத்திரம் வடி வமைக்கப்பட்ட விதம் பாராட்டுக் குரியது.

விஜய் ஆன்டனி தனக்காக உரு வாக்கிக் கொண்டிருக்கும் ‘ஹானஸ்ட்’ பிம்பத்துக்கு பொருந் தும் கதாபாத்திரத்தில், அலட்டல் இல்லாத நடிப்பை வழங்குகிறார். ரொமான்ஸ் காட்சிகள் வழக்கம் போல அவருக்கு சரிவரவில்லை. இதையும் புரிந்துகொண்டுள்ள அவர், அந்த இடங்களை கவன மாகவே கையாண்டிருக்கிறார்.

கதாநாயகன் பாத்திரத்தைவிட பலமாகவும், திரைக்கதையை விறுவிறுப்பாக்கும் வகையிலும் அர்ஜுன் கதாபாத்திரம் அமைக்கப் பட்டுள்ளது. விசாரணையின் போக்கு குறித்து முன்னாள் காவல் அதிகாரியான நாசரிடம் அவர் ஆலோசிப்பது மற்றும், நாசர் தரும் யோசனைப்படி செயல்படுவது ஆகிய இடங்களில் அர்ஜுன் மிரட்டு கிறார். ‘ஆக் ஷன் கிங்’ எந்த ஆக் ஷனுமே செய்யாமல், இயல்பான நடிப்பை வழங்கி பார்வையாளர்கள் மனதில் இடம்பிடிக்கிறார்.

அறிமுக நாயகி ஆஷிமா நார்வலுக்கு எல்லா வகையிலும் சிறந்த அறிமுகக் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டுள்ளார். கச்சிதமான நடிப்பு. புலன் விசாரணைக்கு உதவும் ‘ஷேடோ ஆபீஸராக’ நாசர். தனது புத்திசாலித்தனத்தால் புலன்விசார ணைக்கு விறுவிறுப்பு கூட்டுவ தற்கு பதிலாக, வெறுமனே கேள்வி களை எழுப்பிவிட்டுக் கடந்து போவதுபோல அவரது கதாபாத் திரத்தை சொத்தையாக வடித்து, நல்ல நடிகரை வீணடித்துள்ளனர்.

சீதா, பகவதி பெருமாளின் கதாபாத்திரங்கள் நேர்த்தி. சிறுசிறு இடங்களாக இருந்தாலும் ஸ்கோர் அள்ளுகின்றனர். கட்டுமானத் துறையில் பணிபுரி யும் விஜய் ஆன்டனியின் பின்னணி வாழ்க்கை தொடர்பான கதைப் பகுதி சுவாரஸ்யமாக இல்லை. அதை அழுத்தமாகவும் பதிவு செய்ய வில்லை. அதேபோல, உருவ ஒற் றுமை குறித்து அவர் விவரிக்கும் இடம் சினிமாத்தனம். காவல் துறை யில் இருந்து தன்விருப்பத்துடன் விலகிய ஓர் அதிகாரியின் குடும்பப் பின்னணி, அவரைப் பற்றி விசாரிக்கும் அதிகாரிக்கு தெரியவில்லை என்பது திரைக்கதையின் பெரிய ஓட்டை.

முகேஷ் ஒளிப்பதிவும், சைமன் கே.கிங் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் பலம். இரு வருமே இயக்குநரின் எண்ண ஓட்டத்தை நன்கு புரிந்து, திரைக் கதைக்கு வலு சேர்த்துள்ளனர். கொலை மர்மக் கதையில் ஒட்டாத இரு பாடல்களையும், நாயகனின் பிரதாபம் பாடும் ஒரு பாடலையும் களைந்திருந்தால் படம் இன்னும் சுவை கூடியிருக்கும். மற்றபடி, கொலைகாரன் - விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாத மர்ம ராஜா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x