Last Updated : 02 Jun, 2019 03:14 PM

 

Published : 02 Jun 2019 03:14 PM
Last Updated : 02 Jun 2019 03:14 PM

மெளன நாயகன் மணிரத்னம்! - ஹேப்பி பர்த் டே மணி சார்!

'இவர் இன்னார்கிட்ட அஸிஸ்டென்டா இருந்தார் தெரியுமா?’ என்று எந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்தார்கள் என்பதையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டு, பெருமையுடன் சொல்லுவார்கள். ஆக, யாரிடம் இருந்து வந்தவர் என்பது திரையுலகில் மிகப்பெரிய விசிட்டிங் கார்டு. ஐஎஸ்ஐ முத்திரை. ஆனால், இப்படியான விசிட்டிங் கார்டு இல்லாமல், ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல், தடக்கென்று உள்ளுக்குள், நுழைந்து, தனிமுத்திரை பதித்தவர் இயக்குநர் மணிரத்னம்.

மணிரத்னம். இந்தப் பெயர் என்றைக்கு நமக்குப் பரிச்சயமானதோ, அன்று தொடங்கி இன்றைக்கு ‘பொன்னியின் செல்வன்’ படமாக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியிருக்கும் வரை... ஏறிக்கொண்டே இருக்கிறது மணிரத்ன கிராஃப்.

கன்னடப் படத்திலிருந்துதான் தொடங்கினார். சென்னையில் இருந்து கிளம்பி பெங்களூரு போய், அங்கே படம் பண்ணிவிட்டு, பிறகு கேரளம் சென்று அங்கே படத்தையும் கொடுத்துவிட்டு, தமிழுக்கு வந்தார் மணிரத்னம். தமிழில் முதல்படமாக, ‘பகல் நிலவு’ படத்தை வழங்கினார். முரளி, ரேவதி, சத்யராஜ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். இளையராஜாதான் இசை.

அதையடுத்து அதே வருடத்தில், கோவைத்தம்பியின் தயாரிப்பில் மோகன், ராதா, அம்பிகா நடிப்பில் ’இதயக்கோயில்’ படத்தை உருவாக்கித் தந்தார். இந்தப் படத்தின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட். ஆனால், படம் சுமாராகத்தான் ஓடியது. அதேசமயம் சூப்பர் படம்பா என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

மூன்றாவது படத்தில்தான் ‘மணிரத்னம் யார்’, ‘யாருப்பா டைரக்டரு’ என்றெல்லாம் கேட்கத் தொடங்கினார்கள். அந்தப் படத்தை இன்றைய இளைஞர்கள் கூட கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அது ‘மெளனராகம்’.

பிறகு 87ம் ஆண்டு... தன் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, மொத்த திரையுலகிற்கும் புதியதொரு வைட்டமின் வெளிச்சத்தைப் பாய்ச்சினார் மணிரத்னம். கமல், பாலகுமாரன், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா எனும் மெகா கூட்டணி அமைத்து, மிகப்பிரமாண்டமான படத்தை வழங்கினார். அந்தப் படம்தான் இன்றைக்கும் டிரெண்டிங் நாயகனாகப் போற்றப்படுகிறது. ‘நாயகன்’ தந்த தாக்கத்தால், இன்று வரை மீளவில்லை தமிழ்த் திரையுலகம்.

எடுத்துக்கொள்ளும் கதை, அந்தக் கதையை விரிவுபடுத்துகிற திரைக்கதை, திரைக்கதையைச் சிதைக்காமல் விரிகிற காட்சிகள், அந்தக் காட்சிகளில் தெளித்துத் தெறிக்கவிடுகிற புதுமை, வார்த்தைகளின் சுருக்கம், வசனங்களின் அடர்த்தி, அந்தக் காட்சியில் விழுகிற ஒளிமழை என சகலத்திலும் வித்தியாசம் காட்டினார்.

அடுத்து வந்த ‘அக்னிநட்சத்திரம்’ திரைப்படமும் வெற்றிக் குதிரையென பாய்ச்சல் காட்டியது. பிரபுவும் கார்த்திக்கும் பிரமாதப்படுத்தியிருந்தார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு படத்திலும் பேசப்பட்டார் மணிரத்னம். இதயத்தைத் திருடாதே, அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமெனப் படம் கொடுத்ததும் கதையமைப்புகளும் என மிரட்டினார்.

தன் முதல் படம் தொடங்கி தளபதி வரை இளையராஜாவின் இசையுடன் பயணித்தவர், ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார். அப்போதிருந்து இப்போது வரை ரஹ்மான் இசைதான் மணிரத்னத்துக்கு!

இத்தனை வருட நீண்டதான பயணத்தில், படங்கள் குறைவுதான். ஆனால் ஒவ்வொன்றும் மணியான படங்கள். முதல் நாலு படம் வரை மணிரத்னம் முகமே எவருக்கும் தெரியாது. ‘நாயகன்’ படத்துக்கு முந்தைய படம் வரை பேசிக்கொண்டுதான் இருந்தார். பிறகுதான், ‘நாம ஏன் பேசணும்? நம்ம படம் பேசினாப் போதும்’ என்கிற முடிவுக்கு வந்தார் போல!

மனிதர், இத்தனை வருட சினிமாவில் எழுதிய வசனங்களை, ஒரு குயர் நோட்டுக்குள் அடைத்துவிடலாம். இவர் பேசிய பேச்சுகளை, ஒரு ஏ4 பேப்பரில் எழுதிவிடலாம். மணிமணியாய் படமெடுத்துக் கொண்டிருப்பதும் ரத்னச் சுருக்கமாய் வசனங்கள் எழுதுவதுமே தன் ஸ்டைல் என உருவாக்கினார். இந்தியா முழுவதும் விரிந்துகிடக்கிற மணிரத்ன வியாபாரம்தான்... தமிழ் சினிமாவுக்கான இன்னொரு அகலக்கதவு!

புராணக் கதைகளின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அதைக் கொண்டுதான் ‘தளபதி’ செய்தார். ‘ராவணன்’ பண்ணினார். முன்பே ‘சத்தியவன் சாவித்திரி’ பண்ணினார். அதேபோல், தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களைக் கொண்டு, அவர்களின் வாழ்க்கையை ‘இருவர்’ என்றெடுத்தார்.

அப்போது ‘அலைபாயுதே’வும் இளைஞர்களைக் கவர்ந்தது. இப்போதைய ‘ஓ காதல் கண்மணி’யும் அவர்களின் வாழ்வியலைச் சொல்லியது.

என்ன சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் மணிரத்னத்தின் படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய ஓபனிங் உண்டு. இதோ... இப்போது கூட ‘பொன்னியின் செல்வன்’ ஆரம்பத்திலேயே பேசுபொருளாகிவிட்டார் மணிரத்னம். ஆனால் அவர் ஒருபோதும் அதிகமாகப் பேசமாட்டார். அவர்... மெளன நாயகன்!

மெளன நாயகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று (2.6.19). ஹேப்பி பர்த் டே மணி சார்!

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x