Published : 02 Jun 2019 08:02 AM
Last Updated : 02 Jun 2019 08:02 AM

திரை விமர்சனம்- என்ஜிகே

எம்.டெக். முடித்து டாக்டர் பட்டமும் பெற்றவர் சூர்யா (‘நந்த கோபாலன் குமரன் - என்ஜிகே). மென்பொருள் நிறுவன வேலையை உதறிவிட்டு சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர்க ளுடன் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்கி றார். சமூக சேவையும் செய்து ஊர் மக்களின் நன்மதிப்பை பெறுகிறார். ஆனாலும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமையும், அதிகாரமும் அரசியல்வாதிகளுக்கு மட் டுமே இருக்கிறது என்பதை உணர்ந்து, பிர தான எதிர்க்கட்சியில் உறுப்பினராக சேர்கி றார். நெளிவு சுளிவுகளைக் கற்று படிப்படி யாக முன்னேறுகிறார். கட்சிகளுக்கு உதவும் கார்ப்பரேட் தரகு நிறுவன அதிபர் ரகுல் ப்ரீத் சிங்கின் உதவியையும் நாடுகிறார். சூர்யாவின் வளர்ச்சியைப் பார்த்து பயந்து போகும் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவ ரும் அவரை அழிக்க முயல்கின்றனர். சூர்யாவின் மனைவி சாய் பல்லவி, பெற் றோர் நிழல்கள் ரவி - உமா பத்மநாபனும் குறிவைக்கப்படுகின்றனர். இறுதியில் சூர்யா குடும்பத்துக்கு என்ன ஆகிறது? தன் அரசியல் பயணத்தில் சூர்யா வெற்றி பெற்றாரா என்பது மீதிக் கதை.

சாதிக்கத் துடிக்கும் கதாநாயகன் அரசியலில் நுழையும் வழக்கமான கதை. கரைவேட்டி கட்டியவரின் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை காட்டும் பாலாசிங், அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் கார்ப்பரேட் தரகர் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இருவரது கதாபாத்திரங்கள் பளிச்சென்று முகம்காட்டுகின்றன.

சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்ச் டயலாக் உள்ளிட்ட மிகை நாயகத்தன்மை இல்லாத நடிப்பை வழங்கியுள்ளார். அரசியல் வாதியிடம் அவமானப்படுவது, மனைவி யின் சந்தேகப் பார்வையை எதிர்கொள்வது, குடும்பத்தினரிடம் தனது கனவுக்கான அங்கீ காரத்தைக் கோருவது என நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார்.

கணவனை உயிருக்கு உயிராக நேசிக்கும் மனைவியாக வந்துபோகிறார் சாய்பல்லவி. தொடக்க காட்சிகளில் நன்கு ஸ்கோர் செய்கிறார். புதுமையான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் ரகுல் ப்ரீத் சிங். அளவான அலட்டல், அசத்தலான கார்ப்பரேட் தோரணை, மற்றொரு புத்தி சாலியை கண்டுகொள்ளும்போது காட்டும் ஈர்ப்பு, அதன் தொடர்ச்சியாக துளிர்க்கும் காதல் ஆகிய உணர்வுகளை திறம்பட வெளிப்படுத்துகிறார். ஆனால், ஈர்ப்பு மிக்க அந்த கதாபாத்திரத்தை, ஒரு மொக்கையான டூயட் பாடலில் குழிதோண்டிப் புதைத்து விடுகிறார் இயக்குநர்.

சூர்யாவின் அரசியல் ஆசானாக பாலாசிங், உள்ளூர் எம்எல்ஏவாக இளவரசு ஆகியோர் நல்ல நடிப்பை தந்துள்ளனர். பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, தலை வாசல் விஜய் ஆகியோரும் படத்தில் இருக்கின்றனர். செல்வராகவன் படத்தில் வழக்கமாகவே யாராவது ஒருவர் விசித்திர மாக நடந்துகொள்வார். இதில் சாய் பல்லவி, உமா பத்மநாபன் மட்டுமல்லாமல் அவ்வப் போது சூர்யா வேறு! இது படத்துக்கு வலு சேர்ப்பதற்கு பதிலாக, பலவீனமாக வெளிப்படுகிறது.

கழிப்பறை கழுவி அரசியலின் ஆழத்தை கற்றுக்கொள்ளும் சூர்யா, இறுதி இலக்கை நோக்கி காய்களை நகர்த்தி முன்னேறுவது ‘ஸ்பிளிட் பர்சனாலிட்டி’ போல எரிச்சலூட்டு கிறது. தொடக்கம் முதலே அவருக்கு நேரும் பாதிப்புகள், இழப்புகள், அவர் சந்திக்கும் தாக்குதல்கள், விடாமல் வசனம் பேசுவது எல்லாம் சீரியலை நினைவூட்டுகின்றன.

நாயகன் செய்வதையெல்லாம் நம்பி ஏமாறுகிற அப்பாவிகளாகவும், பிறகு அவரை அழிக்க மொக்கையான திட்டங்களைப் போட்டு, அதிலும் தோல்வியடைகிற பலவீனர் களாகவும் பிரதான அரசியல் தலைவர்கள் காட்டப்படுகிறார்கள். குழந்தைகள்கூட நம் பாது. அரசியல்வாதிகள் - கார்ப்பரேட்களின் கள்ளக் கூட்டணியில் யாருக்கு பலம் அதிகம், யார் யாரை கட்டுப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாக வெளிப்படவில்லை. திரைக்கதையிலும் ஏராளமான சிக்கல்கள், எந்த கதாபாத்திரமும் தெளிவாக வரையறுக் கப்படவில்லை. நல்லவரான என்ஜிகே, அரசியலுக்கு வந்த பிறகு சில தந்திரங்களை செய்கிறார். கெட்டவர்களை வீழ்த்த இப்படி செய்கிறாரா, அல்லது அவரும் கெட்டவராக மாறிவிட்டாரா என்பது இறுதிவரை புரியவில்லை.

இறுதிநிலை புற்றுநோயாளி என்று சொல்லப்படும் கதாபாத்திரம் அதற்கான அறிகுறியே இல்லாமல் சாதாரணமாக உலவு வது, குண்டு வைத்து கொல்லப்பட்டவர்கள் அடுத்த நாளே எலும்புக்கூடாகக் கிடப்பது, முதல்வரின் அந்தரங்க ரகசியங்கள் என்ஜிகே-க்கு மட்டுமே தெரிவது என லாஜிக் பிழைகளும் ஏராளம். தெளிவில்லாத திரைக் கதை, நேர்த்தியற்ற கதாபாத்திர சித்தரிப் புகள், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத காட்சிகள் எல்லாமாக சேர்ந்துகொண்டு, அலுப்பைத் தருகின்றன. தன் இலக்கு என்ன என்று என்ஜிகே-க்கு தெரியாமல் இருக்க லாம். இயக்குநருக்காவது தெரிந்திருக்க வேண்டாமா? ‘புதுப்பேட்டை’ அவலை நினைத்து ‘என்ஜிகே’ உரலை இடித்திருக் கிறார் செல்வராகவன். நசுங்கியது என்னவோ ரசிகர்களின் தலைகள்தான்.

வித்தியாசமான இசைக்கருவிகள், ஒலிக ளைப் பயன்படுத்தி கவனிக்க வைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. புரட்சிகரமாக ஏதோ நடக்கப்போகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் உள்ளன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு சிறப்பு. கழிப்பறை சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியது.

இளைஞர்கள் தயக்கமின்றி அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவசியமான, காலத் துக்கேற்ற கருவை தேர்ந்தெடுத்தது அருமை. ஆனால், அதை சூர்யா என்ற நாயகனுக் கான மசாலா சினிமாவாகவும் இல்லாமல், செல்வராகவன் என்ற படைப்பாளியின் சினிமாவாகவும் இல்லாமல் அரைவேக்கா டாகப் பொங்கியதில், ‘நொந்த கோபாலன் குமரன்’ ஆகிவிட்டான் என்ஜிகே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x