Last Updated : 18 Jun, 2019 03:18 PM

 

Published : 18 Jun 2019 03:18 PM
Last Updated : 18 Jun 2019 03:18 PM

பாஜக, அதிமுகவை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்

'கூர்கா' இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய பேச்சில் பாஜக மற்றும் அதிமுகவை மறைமுகமாக கிண்டல் செய்தார் கரு.பழனியப்பன்

‘டார்லிங்’, 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', '100' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'கூர்கா' படத்தை இயக்கியுள்ளார் சாம் ஆண்டன். இதில் யோகி பாபு, சார்லி, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு நாயும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

4 Monkeys Studio தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சித்தார்த், கரு.பழனியப்பன், பாடகர் எஸ்.,பி.பி, எஸ்.பி.சரண் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும் போது, “5 ஆண்டுகளுக்கு முன்பு ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவரை ராஜராஜனோடு ஒப்பிட்டுப் பேசினேன். நிறைய பணம் வைத்துக்கொண்டு ஒரு படம் எடுக்காமல், சின்னச் சின்ன படமாக நிறைய எடுத்து ராஜராஜனைப் போல் வேலை செய்ய வேண்டும் என்றேன். இன்று ராஜராஜனைத்தான் முக்கியமான டாப்பிக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை முதன்முதலில் பேசியவன் நான் என்பதை நினைவுகூர்கிறேன்.

ராஜராஜன் காலம் முடிந்துவிட்டது. இருண்ட காலம் களப்பிரர் காலமா, ராஜராஜன் காலமா என்பதை வரலாற்று ஆசிரியர்கள் தீர்மானித்துவிட்டுப் போகிறார்கள். வாழும் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், தஞ்சாவூரில் மீத்தேன் என்ற ஒன்றை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை திரும்பிப் பாருங்கள், ராஜராஜனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நம் நிலத்தை யார் பறித்தார்கள் என்பது முக்கியமில்லை. நம் கண் முன்னால் ஒருத்தன் பறித்துக் கொண்டே இருக்கிறான். அவனை கவனிக்காமல் ராஜராஜன் பற்றிப் பேசுவது முக்கியமில்லை.

சித்தார்த் மற்றும் மயில்சாமி இருவரும் சமூகக் கருத்துகளை பேசிக்கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை செய்யாதவர்கள், ஏன் இதனை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். வரலாற்றில் 30 கோடி பேர் வாழ்ந்த இந்தியாவில் சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் 3 லட்சம் பேர் தான். அப்புறம் அதனை 30 கோடி பேர் அனுபவித்தார்கள். ஆகவே, கொஞ்சம் பேர் கத்திக் கொண்டிருப்பார்கள். அப்படி நாம் கத்திக் கொண்டே இருப்பது அவசியம்.

'கூர்கா' என்பதை தமிழில் வாட்ச்மேன் என்பார்கள். இங்கு வாட்ச்மேன்கள் தான் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக சவுக்கிதார்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார்கள். அதே போல் இந்த 'கூர்கா'வும் நம்மை மகிழ்விப்பார். இன்னுமொரு 5 ஆண்டுகள் சவுக்கிதார்கள் நம்மை மகிழ்விக்கப் போகிறார்கள். நம்மளும் இடுக்கண் வருங்கால் நகுக என்று அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறோம்.

இன்று காலை அனைத்து பேப்பரில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தது தான் தலைப்புச் செய்தி. அதற்கு கீழேயே தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அவசர ஆலோசனைக் கூட்டம் என்ற செய்தி இருந்தது. அந்தச் செய்திக்குள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார் என்பதும் இருந்தது. இவர்கள் எல்லாம் சவுக்கிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள்” என்று பேசினார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x