Published : 03 Jun 2019 03:33 PM
Last Updated : 03 Jun 2019 03:33 PM

அழகிய தீர்வு: மும்மொழித் திட்ட வரைவுத் திருத்தம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து

இந்தி கட்டாயமல்ல என்ற மும்மொழித் திட்ட வரைவு அறிக்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்கிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தியும், இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு போன்ற மாநில மொழிகளையும் படிக்க வேண்டும் என இந்த வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைப் போன்று கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் இந்திக்கு எதிராக ஆட்சேபக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, திருத்தப்பட்ட வரைவு கல்விக்கொள்கை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, “அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு” என ட்வீட் செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரின் இந்த ட்வீட்டுக்கு, ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் வரிகளை பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக, ‘மரியான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான்’ பாடலை பஞ்சாபி ஒருவர் பாடிய கவர் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “பஞ்சாபில் தமிழ் பரவிக் கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x