Published : 23 Jun 2019 05:49 PM
Last Updated : 23 Jun 2019 05:49 PM

எனது இதயத்தை ஈர்க்கின்ற திரைக்கதைகளையே நான் தேர்வு செய்கிறேன்: ராணி முகர்ஜி

எனது இதயத்தை ஈர்க்கின்ற திரைக்கதைகளையே நடிப்பதற்கு நான் தேர்வு செய்கிறேன் என்று தனது தற்போதைய மற்றும் மாறுபட்ட திரைப்பட தேர்வுகள் குறித்து ராணி முகர்ஜி மனம் திறந்து பேசியுள்ளார்.

ராணி முகர்ஜி நடிப்பில் கடைசியாக வெளிவந்த, சமூக நலன் சார்ந்த திரைப்படமான 'ஹிச்கி' உலகெங்கிலும் மிக வெற்றிகரமாக ஓடி ரூ.250 கோடி வசூலை அள்ளியது.  ராணி முகர்ஜியின் அடுத்த திரைப்படமான 'மர்தாணி 2' அவர் நடித்து சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைப்படமான மர்தாணியின் தொடர்ச்சியே. 

சமூக உரையாடல்களைத் தொடங்கி வைப்பதோடு மட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூலில் சாதனைகளை நிகழ்த்தக்கூடிய திரைப்படங்களை  ஆராய்ந்து தேர்வு செய்யும் விதம் குறித்து ராணி முகர்ஜி கூறியதாவது:

''இந்தியாவிலும், சீனாவிலும் மற்றும் உலகெங்கிலும் லட்சக்கணக்கான பார்வையாளர்களின் இதயங்களை 'ஹிச்கி' திரைப்படம் கொள்ளையடித்தது என் மனதில் தாழ்ச்சி மற்றும் நன்றியுணர்வை விதைத்திருக்கிறது. எனது இதயத்தை ஈர்க்கின்ற மற்றும் ஒரு நடிகராக என்னை கவர்ந்திழுக்கிற திரைக்கதைகளையே நான் தேர்வு செய்கிறேன்.  எனக்கு கிடைத்த திரைக்கதைகளிலிருந்து மிகச்சிறப்பானதை என்னால் தேர்வு செய்ய முடிந்திருப்பது எனது நல்ல அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். 

இக்கதைகளில் இந்தக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான நபராக என்னை இத்திரைப்படங்களின் இயக்குநர்களும், கதாசிரியர்களும் கருதியிருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.  சரியான நேரத்தில், சரியான திரைக்கதை எனக்கு கிடைக்கப் பெற்றிருப்பதில் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவளாக நான் இருந்து வருகிறேன்.  பார்வையாளர்களுக்கு ஒரு கதையைச் சொல்வதை நான் மகிழ்ச்சியோடு அனுபவித்துச் செய்திருக்கிறேன்.  ஏனெனில், ஒரு சமூக அக்கறையுள்ள திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்றால், அதை பார்வையாளர்களுக்காகத்தான் நாம் உருவாக்குகிறோம்.

இந்தியாவில் பல நபர்கள் இதுவரை அறிந்திருக்காத டூரெட் நோயின் அறிகுறிகள் குறித்து 'ஹிச்கி' திரைப்படத்தின் வழியாக இப்போது அறிந்திருக்கின்றனர்.  நாம் அதைக் காண விரும்பவில்லையென்றாலும் கூட, நம்மைச் சுற்றி மிக அதிகமாக காணப்படுகின்ற குற்றமான பாலியல் வர்த்தக நோக்கங்களுக்காக குழந்தைகளைக் கடத்துகின்ற பெரும் ஆபத்து நமது வாழ்க்கையில் எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்கு 'மர்தாணி' திரைப்படத்தின் மூலம் எங்களால் கூற முடிந்தது. 

நமது கண்களையும், காதுகளையும் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் அகல திறந்து வைத்திருப்பதும் மற்றும் நமது குழந்தைகளைப் பாதுகாப்பதும் அவசியமாகும்.  ஆகவே, இத்தகைய கதைகளை நான் வாசிக்க நேரும்போது, இந்த விஷயங்கள் எனக்கு புதிய விஷயங்களை கற்றுத் தருபவையாக இருக்கின்றன என்றே நான் கருதுகிறேன்.  'மர்தாணி 2' திரைப்படத்தில் அதிர்ச்சிக்கு ஆளாக்குகின்ற ஒரு விஷயம் குறித்து நாங்கள் மீண்டும் பேசவிருக்கிறோம்.  நிஜத்தில் மிகவும் யதார்த்தமான, அச்சுறுத்துகின்ற உணர்வைத் தருகின்ற ஒரு விஷயத்தை பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் வெளிப்படுத்தும்.  நமது வாழ்க்கையிலும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பிறரது வாழ்க்கையிலும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு இது தெளிவாக புரியும் வகையில் உணர்த்தும்” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x