Published : 14 Jun 2019 08:16 PM
Last Updated : 14 Jun 2019 08:16 PM

முதல் பார்வை - சுட்டுப்பிடிக்க உத்தரவு

தனது வாய் பேச முடியாத மகளின் ஆபரேஷனுக்கு பணம் இல்லாததால் விக்ராந்த், சுசீந்திரன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கின்றனர். அங்கிருந்து தப்பிக்க முயலும் கொள்ளையர்களை காவல்துறை அதிகாரியான மிஷ்கின் சுற்றிவளைக்கிறார். அப்போது நடக்கும் மோதலில் மிஷ்கினின் கை உடைகிறது.

கொள்ளையர்களில் ஒருவர் கொல்லப்படுகிறார். மீதியிருக்கும் மூன்று பேரும் அங்கிருந்து தப்பித்து அருகில் இருக்கும் ஏரியாவில் நுழைகின்றனர். அவர்களை ’சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டு’ பெரிய போலீஸ் படையுடன் களத்தில் இறங்குகிறார் கமிஷனர் மிஷ்கின். கொள்ளையர்கள் இறுதியில் பிடிபட்டார்களா இல்லையா என்பதற்கு விடையளிக்கிறது திரைக்கதை.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கியுள்ளார்.  ஆரம்பித்த அடுத்த கணமே கதைக்குள் நுழைந்து படம் விறுவிறுப்புடன் செல்கிறது. தேவையற்ற வளவள அறிமுக காட்சிகள் எதுவும் இல்லாதது ஆறுதல். ஆனால் படம் தொடங்கும்போது நிமிர்ந்து உட்கார வைக்கும் இயக்குனர் அடுத்தடுத்த காட்சிகளில் நெளிய வைக்கிறார்.

வங்கியை கொள்ளையடித்து விட்டு தப்பிக்கும் காட்சிகளில் ஏதோ ஷாப்பிங் செய்து விட்டு வெளியே செல்வது போல கொள்ளையர்கள் செல்கின்றனர்.  இவ்வளவு துப்பாக்கி ஏந்திய போலீஸார் சூழ்ந்திருக்க கொள்ளையர்கள் ஓடிக் கொண்டே இருப்பதும், கொள்ளையர்களின் நடவடிக்கைகளை நாயகி அதுல்யா ரவி லைவ் ரிப்போர்ட் செய்வதும், துப்பாக்கிகளோடு போலீஸ் துரத்தும்போது விக்ராந்த் சிறுவர்கள் ஓட்டும் சைக்கிளில் தப்பிப்பதும் அபத்தங்களின் உச்சம். இது போல படம் முழுக்க பெரிய பெரிய லாஜிக் ஓட்டைகள்.

சுசீந்திரனுக்கு நடிகராக இது முதல் படம். நடிப்பதற்கு பெரிதாய் வாய்ப்பில்லை என்றாலும் கொடுத்த கேரக்டரை சரியாய் செய்திருக்கிறார். விக்ராந்தும் தனக்கு எது வருமோ அதை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் ஹீரோ உண்மையில் மிஷ்கின் தான். ஒரு போலீஸ் அதிகாரியாக பதற்றத்தை வெளிப்படுத்தும்போதும், சக அதிகாரிகளிடம் கோபப்படும் காட்சிகளிலும்  சின்ன சின்ன இடங்களில் கூட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு நடுவே மாட்டிக் கொள்ளும் செய்தியாளர்கள், அவர்களுக்கு உதவும் குப்பத்து பெண்ணான அதுல்யா ரவி எல்லாம் கதைக்கு தேவையற்ற இடைசெருகல்கள். கதையின் போக்குக்கு எந்த விதத்திலும் அவர்கள் உதவவில்லை. கடைசியில் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கும் படத்தில் விடையில்லை.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். ஸ்டண்ட் காட்சிகளில் அனல் பறக்கிறது. படம் முழுக்க ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது.

படம் முழுக்க யாராவது ஒருவர் சுட்டுக் கொண்டே இருப்பது அலுப்பை ஏற்படுத்துவதோடு எங்கு நம்மையும் சுட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. படம் முழுக்க நிரம்பி வழியும் லாஜிக் இல்லாத அபத்தங்களை கிளைமேக்ஸ் காட்சி காப்பாற்றிவிடுகிறது. அது ஒன்று தான் லாஜிக் ஓட்டையை எல்லாம் மறந்து ஒருவித திருப்தியோடு அனுப்பி வைக்கிறது.

மிஷ்கினின் நடிப்பு, பின்னணி இசை, கிளைமாக்ஸ் ட்விஸ்ட்  ஆகியவற்றுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x