Published : 21 Jun 2019 11:07 AM
Last Updated : 21 Jun 2019 11:07 AM

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்: மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதும் இளங்கோ குமரவேல்

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கதையை, மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் இருவரும் இணைந்து எழுதி வருகின்றனர்.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வந்தார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அமலா பால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம். ஐஸ்வர்யா ராய் தவிர்த்து, வேறு யாருமே படத்தில் நடிப்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. மேலும், அனுஷ்காவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம்.

இந்தப் படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இயக்குநர் மணிரத்னத்துடன் சேர்ந்து திரைக்கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இளங்கோ குமரவேல். ‘அபியும் நானும்’, ‘குரங்கு பொம்மை’, ‘காற்றின் மொழி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இளங்கோ குமரவேல்.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் சேர்ந்து எழுதிய சிவா ஆனந்தும் ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதைக் குழுவில் இடம்பெற்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராக மட்டுமே பணியாற்றுகிறார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து தயாரிக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x