Published : 03 Jun 2019 05:34 PM
Last Updated : 03 Jun 2019 05:34 PM

இரவுப் பாடசாலை மூலம் அரசியல், சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் பா.இரஞ்சித்

ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வு பெற இரவுப் பாடசாலை மூலம் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை, அவர்களின் வாழ்வியல், அரசியல் ஆகியவற்றைத் தொடர்ச்சியாகத் தன்னுடைய படங்களின் மூலம் பேசி வருபவர் இயக்குநர் பா.இரஞ்சித். அவரின் இந்த முயற்சி படங்களோடு நின்றுவிடாமல், அவருடைய ‘நீலம் பண்பாட்டு மையம்’ மூலம் பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறார்.

அதன் ஒருபகுதி தான், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வு பெற இரவுப் பாடசாலையைத் தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பென்னக்கல், கெளதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய இடங்களில் இரவுப் பாடசாலையைத் தொடங்கி வைத்துள்ளார்.

ஜெய்பீம் பேரவை மற்றும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியவற்றின் உதவியோடு பா.இரஞ்சித் தொடங்கியுள்ள இந்த இரவு பாடசாலைக்கு, ‘டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

“இரவுப் பாடசாலை மூலம் மக்களுக்கு அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை அறிவார்ந்தவர்களாக நெறிப்படுத்துவதே நோக்கம். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இதைச் செயல்படுத்தும் திட்டம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார் பா.இரஞ்சித்.

பழங்குடியின மக்களின் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார் பா.இரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x