Last Updated : 26 Jun, 2019 09:55 AM

 

Published : 26 Jun 2019 09:55 AM
Last Updated : 26 Jun 2019 09:55 AM

ஸ்க்ரிப்டைக் காணோம், சென்டிமென்டா நல்லதுக்குத்தான்னு கூலாச் சொன்னார் கிரேஸிமோகன்!’’ - கே.எஸ்.ரவிக்குமார் ஜாலிப் பேச்சு

’’ஸ்கிரிப்ட்டை காணாமப் போட்டுட்டு, அதையும் செண்டிமெண்ட்டுன்னு சொன்னார் கிரேஸி மோகன் என்று புகழஞ்சலிக் கூட்டத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசினார்.

கிரேஸி மோகனுக்கு புகழஞ்சலிக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:

‘’எனக்கும் கிரேஸி மோகனுக்கும் 25 வருடப் பழக்கம் உண்டு. ஆறு படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். ‘அவ்வை சண்முகி’ படத்துக்கு முன்னதாக கமல் சாருடன் ‘கண்டேன் சீதையை’ எனும் படத்தின் வேலைகளைத்தான் ஆரம்பித்தார்கள். ஆனால் ஏதோ காரணத்தால், நிறுத்தப்பட்டது. அப்போது கமல் சார், நான், கிரேஸிமோகன் எல்லோரும் சேர்ந்து ஒரு கதை ரெடி பண்ணினோம்.

அந்தக் கதை மெல்ல மெல்ல வளர்ந்து, அந்த ஸ்கிரிப்ட் பேப்பர் கிரேஸி மோகனிடம் இருந்தது. ஒருநாள், அறையில் இருந்து பேசிக்கொண்டே வெளியே வந்து விடைபெற்றுக் கிளம்பினோம். முன்னதாக, காருக்கு அருகில் நின்றுகொண்டும் பேசினோம்.

மறுநாள்... கிரேஸி மோகன் வந்தார். ‘சார்... புதுசா கதை ரெடி பண்ணுவோமா?’ என்று கேட்டார். ‘ஏன் சார், இதுவரை பண்ணின கதையே நல்லாத்தானே இருக்கு. அதை இன்னும் டெவலப் பண்ணுவோம் சார்’ என்றேன். உடனே அவர், ‘சார், மன்னிக்கணும். அந்த ஸ்கிரிப்ட் பேப்பர் காணாமப் போயிருச்சு’ என்றார். நான் அவரையே பார்த்தேன்.

கிரேஸி மோகனே தொடர்ந்தார்... ‘’நேத்து பேசிட்டிருக்கும் போது, காருக்கு மேலே ஸ்கிரிப்ட்டை வைச்சிருந்தேன். அப்படியே மறந்து போய், அதை எடுக்காம விட்டுட்டேன் போல. அப்புறமாத்தான் தெரிஞ்சுச்சு. பரவாயில்ல சார். ஸ்கிரிப்ட் காணாமப் போயிருக்குன்னா, அது நல்லதுக்குத்தான்னு நினைச்சுக்கோங்க சார். சென்டிமென்டா சொல்றேன். அதைப் பண்ணிருந்தாலும் ஒர்க் அவுட் ஆகாதுன்னு தோணுது. அதனால, நாம புதுசா கதை பண்ணிருவோம்’ என்றார்.

இதே மற்றவர்கள் இப்படித் தொலைத்திருந்தால், புலம்பியிருப்பார்கள். அழுதுவிடுவார்கள். நெகட்டீவ்வாகச் சொல்லுவார்கள். ஆனால், எல்லாவற்றையும் பாஸிட்டீவ்வாக மட்டுமே சிந்திக்கவும் செயல்படவுமாக இருக்கக் கூடிய ஒரே மனிதர்.. எனக்குத் தெரிந்து கிரேஸி மோகன் மட்டும்தான். எதையுமே, எவரையும் நெகட்டீவ்வாக நினைக்கவே மாட்டார். சொல்லவே மாட்டார். ‘நல்லதுக்குத்தான்... நல்லதுக்குத்தான்’ என்றுதான் சொல்லிக்கொண்டே இருப்பார்.

அதேபோல, சம்பளத்தைப் பணமாக வாங்கவே மாட்டார். பணத்தைக் கையால் தொடக்கூட மாட்டார். ‘தெனாலி’ படத்தை தயாரித்து இயக்கினேன். அந்தப் படத்துக்கு முன் தொகையாக ஒருலட்சம் ரூபாய் ரொக்கமாக அவருக்குக் கொடுத்தேன். ‘வேணாம் சார், செக்காக் கொடுத்திருங்க சார்’ என்றார். ‘ஏன் சார்’ என்று கேட்டேன். ‘இப்படி ரொக்கமா வாங்கினா, கணக்குலகிணக்குல வராமப் போயிருவோம். எங்க அப்பாவும் என்னைத் திட்டுவார்’னு சொன்னார்.

உடனே நான், ‘இல்ல சார். இது கணக்குல வந்துரும். அதான் ‘வவுச்சர்’ல உங்ககிட்ட கையெழுத்து வாங்குவோமே’ என்றேன். இதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல், ‘வவுச்சர் காணாமப் போயிருச்சுன்னா... ஏன் சார் ரிஸ்க்? செக் கொடுத்துருங்க சார்’ என்று சொன்னார். அப்படியொரு நேர்மையான மனிதர் கிரேஸி மோகன்.

இவ்வாறு கே.எஸ். ரவிக்குமார் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x