Published : 11 Jun 2019 01:56 PM
Last Updated : 11 Jun 2019 01:56 PM

என்னை செல்லப் பொண்ணா ஏத்துக்கிட்டாங்க!- ‘மலர்’ சீரியல் ஜோடியுடன் ஜாலி சந்திப்பு

சா.மகிழ்மதி

சின்னத்திரை ரசிகர்களின் லேட்டஸ்ட் செல்ல ஜோடி மலர் – கதிர். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘மலர்’ தொடரின் இந்த ஜோடியை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சந்தித்துவிடலாம் என்று சென்றிருந்தேன். இருவரும் நடந்துகொண்டே சீரியஸாக டயலாக் பேசிக்கொண்டிருக்க, திடீரென “கட்! கட்!” என்று குரல் கொடுத்த இயக்குநர் ஜெய் அமர் சிங், “ஒரு பத்து நிமிஷம் பிரேக்” என்று ஸ்பாட்டைவிட்டு நகர்ந்தார். சைக்கிள் கேப்பில் சந்திப்பைத் தொடங்கினேன்.

மலர் பாத்திரத்தில் நடிப்பவர் நயனா ஷெட்டி.  சற்றே வட இந்திய சாயல், இதழை விட்டு அகலாத புன்னகை என்று அசத்தும் அழகி. போலீஸ் மிடுக்கும் புது மாப்பிள்ளை மினுக்குமாகக் கலக்குறார் ‘கதிர்’ அருண் பத்மநாபன்.

லேடீஸ் ஃபர்ஸ்ட்டல்லவா? முதலில் நயனா.

“அதென்ன அப்படி ஒரு கலர். சென்னை வெயில் ஒண்ணும் பண்ணலயா?” என்று கேட்டால், கலகலவென சிரிக்கிறார்.

“ஆக்சுவலி, நான் பெங்களூரு பொண்ணு. ‘மலர்’ சீரியல் மூலமாத்தான் தமிழ்நாட்டுக்கே வந்திருக்கேன். தமிழ் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். காலேஜ் படிக்கும்போது ஜாலியா மேடையில நடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம், தியேட்டர் ஆக்டிங் பக்கம் கவனத்தைத் திருப்புனேன். பெங்களூரு, மும்பைன்னு ஸ்டேஜ் ஷோ பண்ண ஆரம்பிச்ச நேரத்துல, ‘பஞ்சரங்கி பாம்பாம்’னு கன்னட சீரியலில் காமெடி ரோல் பண்ண வாய்ப்புக் கிடைச்சது. செம ஹிட்டடிச்ச சீரியல் அது” என்கிறார்.

“காமெடி ரோலா... பார்த்தா சீரியஸ் டைப் மாதிரி தெரியுதே?” என்றால், அதற்கும் சிரிப்பு. “மலர் சீரியல் பார்த்துட்டு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். ஹியூமர் சென்ஸ் உள்ள ஜாலியான பொண்ணு நான். டைரக்டரையே கலாய்ப்பேன்” என்று கண் சிமிட்டுகிறார்.

தமிழ்ல வாய்ப்பு எப்படி?

என்னோட ஃப்ரெண்ட்தான்  ‘கலர்ஸ் டிவில ஆடிஷன் போயிட்டிருக்கு. கலந்துக்கோ’ன்னு சொன்னா. நா செலக்ட் ஆவேன்னு நெஜமா எதிர்பார்க்கல. செம்ம டீம் இது. ஆரம்பத்தில தமிழ் ரசிகர்களுக்கு என்னோட முகம் ரொம்ப அந்நியமா இருந்திருக்கு, பாக்குற எல்லாருமே இதைத்தான் சொல்லுவாங்க. ஆனா, என்னோட ஆக்டிங்கை பார்த்துட்டு சீக்கிரமாவே என்னைச் செல்லப் பொண்ணா ஏத்துக்கிட்டாங்க - என்கிறார் வானை நோக்கிக் கைகளை விரித்தபடி!

‘அழகுப் பெண்ணாச்சே’ என்று ஆட்டோ கிராஃபுடன் ஓடி வருபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. நயனாவுக்குக் கல்யாணமாகி இரண்டு மாதங்களாகிவிட்டன. “கன்னடத்திலயும் நடிச்சிட்டு இருக்கிறதால, டைம் இல்லை. சென்னையில் மட்டுமே இருபது நாள் ஷூட் இருக்கு. அங்கேயும், இங்கேயும் மாத்தி மாத்தி டிராவல் பண்ணிட்டு இருக்கேன். எப்ப டைம் கிடைச்சாலும் ஃபேமிலிகூடத்தான். வெளிலகூட சுத்த மாட்டேன்” என்று ஃபீலிங்காகிறார்.

“எப்ப பாரு, ஃபீலிங்க்ஸ். எப்பவுமே இவங்க இப்படித்தாங்க” என்று நயனாவைக் கலாய்க்கிறார் அருண் பத்மநாபன். “நயனா மாதிரியே நானும் நம்பிக்கையில்லாமதான் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். செலக்ட் ஆனப்போ அவ்ளோ சந்தோஷம். அப்புறம்தான் தெரிஞ்சது. கதையில என்னோட ரோல் அசிஸ்டென்ட் கமிஷனர்னு. என்னோட ஹைட்டும் உடம்பும்தான் செலக்ட் பண்ண வச்சதுன்னு, எனக்கு நானே தாங்க்ஸ் சொல்லிக்கிட்டேன்” என்கிறார் மீசையை நீவியபடியே.

போலீஸ் கேரக்டர்னா நிறைய பயிற்சி எடுக்கணுமே?

சினிமாவோ சீரியலோ போலீஸ் கேரக்டர்னாலே சவாலானதுதான்! நிறைய ஹோம் வொர்க் பண்றேன். என்னோட பெஸ்ட்டை கொடுக்கணும்தான் ஒவ்வொரு ஷாட்லயும் நடிக்கிறேன் - எனும் அருண், டைரக்‌ஷன் அனுபவமும் உள்ளவராம். “ஆமாங்க. விளம்பரப் படங்கள், மலேசியன் வெப் சீரிஸ், பாகுபலி வெப் சீரிஸ் இதிலெல்லாம் டைரக்‌ஷன் டீம்ல வொர்க் பண்ணியிருக்கேன். சில குறும்படங்கள்லயும் நடிச்சிருக்கேன். இதுதான் என்னோட முதல் சீரியல். எங்க ரெண்டு பேரையும் தமிழ் மக்கள் ஏத்துக்கிட்டாங்க” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “டேக் போலாமா?” என்று இயக்குநர் ரீ என்ட்ரி ஆக, மீண்டும் ‘மலர் – கதிர் ’ ஆகிறார்கள் இருவரும்.

ரெடி ஜூட்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x