Published : 10 Jun 2019 11:48 AM
Last Updated : 10 Jun 2019 11:48 AM

குதிரை மேய்க்க கற்றுக் கொண்டார் ஜீவா: இயக்குநர் ராஜு முருகன்

‘ஜிப்ஸி’ படத்துக்காக நடனமாடும் குதிரையை மேய்க்க கற்றுக் கொண்டார் ஜீவா என இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்துள்ளார்.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. ஜீவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடாஷா சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன், நடனமாடும் குதிரை ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

காரைக்கால், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல படங்களிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கான விளம்பரப் பாடலில், நல்லகண்ணு, பியூஷ் மனுஷ், திருமுருகன் காந்தி, பாலபாரதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ராஜு முருகனிடம், ‘இந்தப் படத்தின் ஹீரோவாக ஜீவாவைத் தேர்வு செய்தது ஏன்?’ என்று கேட்கப்பட்டது.

“ஜீவாவை மனதில் வைத்து இந்தக் கதையை எழுதவில்லை என்றாலும், அவர் நடித்தது நல்லதாகிப் போனது. நாம் எதிர்பார்க்கும் விதத்தில், எந்தக் கதாபாத்திரத்துக்கும் ஏற்றவாறு அவர் மாறிக் கொள்வார். தமிழகத்தில் இருந்து வாரணாசி வரை, காஷ்மீரில் இருந்து கோவா வரை, ஒவ்வொரு காட்சியும் உண்மையான இடங்களில் படமாக்கப்பட்டது.

ஒரு காட்சி கூட செட் போட்டு எடுக்கப்படவில்லை. இப்படி தினமும் உண்மையான இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது, அதில் நடிப்பது எந்த நடிகராக இருந்தாலும் கடினம்தான். ஜீவா அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார். இந்தப் படத்துக்காக அவர் முடி வளர்த்தார், கிடார் வாசிக்கக் கற்றுக் கொண்டார், நடனமாடும் குதிரையை மேய்க்க கற்றுக் கொண்டார்.

அவ்வளவு தூரம் இந்தப் படத்துக்காக அர்ப்பணிப்போடு இருந்தார்” என அதற்குப் பதில் அளித்துள்ளார் ராஜு முருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x