Last Updated : 23 Jun, 2019 10:51 AM

 

Published : 23 Jun 2019 10:51 AM
Last Updated : 23 Jun 2019 10:51 AM

‘ புதியபாதை’க்கு இசையமைக்க மறுத்தார் இளையராஜா’’ - மனம் திறந்த பார்த்திபன்

‘‘புதிய பாதை’ படத்துக்கு இசையமைக்க இளையராஜா மறுத்துவிட்டார். ஆனால் அடுத்த படத்துக்கு இசையமைத்தார்’’ என்று பார்த்திபன் தெரிவித்தார்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனியார் இணையதளச் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

’’பாக்யராஜ் சார்கிட்ட மூணு படம் ஒர்க் பண்ணினேன். அதேசமயம், அவரோட பல படங்கள்ல, கூடவே இருந்திருக்கேன். என்னோட முதல் படத்தை பாக்யராஜ் சார் தயாரிக்கறதா இருந்துச்சு. அப்போ ‘முதல் பார்வை’ன்னு படத்துக்குப் பேர் வைச்சிருந்தேன்.

அந்தப் படத்துக்கு இசை பாக்யராஜ் சார்தான். ஆனா எனக்கு இளையராஜா சார் இசையமைக்கணும்னு ஆசை. ‘எந்த டைரக்டரா இருந்தாலும் அவங்களோட முதல் படத்துக்கு ராஜா சார் இசையமைக்கணும்னு ஆசைப்படுவாங்க. நானும் அப்படித்தான் சார்’னு பாக்யராஜ் சார்கிட்ட சொன்னேன். அவரும் அதைப் புரிஞ்சுக்கிட்டு, ‘சரி, போய்க் கேளு. ஒத்துக்கிட்டார்னா, ஓகே’ன்னாரு.

நானும் ராஜா சார்கிட்ட போய்க்கேட்டேன். ‘அவர் முடியாது’ன்னுட்டார். ‘அவர் (பாக்யராஜ் சார்) ஆர்மோனியப் பொட்டிய தூக்கிட்டாரு. நீயும் ஆர்மோனியத்தை வாங்கிக்கோ’ன்னாரு ராஜா சார். ‘இல்ல சார், நான் அப்படிலாம் பண்ணவேமாட்டேன்னு உறுதி கொடுத்தேன். ஆனாலும் அவர் ஒத்துக்கலை.

அதுக்குப் பிறகு படம் நின்னுபோச்சு. அப்புறம் விவேக்சித்ரா சுந்தரம் சார் தயாரிப்புல, ‘புதியபாதை’ வேலை ஆரம்பிச்சிச்சு. இப்பவும் நான் ராஜா சார்கிட்டப் போனேன். ‘முடியவே முடியாது’ன்னு சொல்லிட்டார். அதுக்குப் பிறகு, சந்திரபோஸ் இசையமைச்சார். ஒரு நல்லவிஷயத்துக்கு, இப்படி எந்த விஷயங்கள் தடையாக இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி வெற்றி கிடைச்சே தீரும்னு சொல்லுவாங்க. அதுக்கு என் வாழ்க்கைல நடந்ததே ஒரு உதாரணம்.

அடுத்தாப்ல, ’பொண்டாட்டி தேவை’ படத்துக்கு திரும்பவும் ராஜா சார்கிட்டப் போனேன். ‘வாய்யா, போனதடவை நீ எங்கிட்ட சொன்னே. நீங்க இல்லாம படம் பண்ணமாட்டேன்னு சொன்னேதானே. அப்புறம் எப்படிப் படம் பண்ணினே. நான் இல்லாட்டீயும் படம் பண்ணனும். அதுக்காகத்தான் இப்படிச் சொன்னேன். இப்ப சேந்து பண்ணலாம்னு ராஜா சார் சொன்னாரு. அதுதான் ‘பொண்டாட்டி தேவை’ படம்.

இந்தப் படத்துக்குப் பிறகு, ஏவிஎம்ல படம் பண்ணக் கூப்பிட்டு அட்வான்ஸ் கொடுத்தாங்க. ’ஆனா ராஜா சார் மியுஸீக் பண்ணமாட்டார். ஒரு சின்ன பிரச்சினை’ன்னு சொன்னார் சரவணன் சார். ‘இல்ல சார். இளையராஜாதான் சார் மியூஸிக். இல்லேன்னா படம் பண்ணல சார்’னு சொல்லிட்டு, அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துட்டேன்.

உடனே சரவணன் சார், ‘உங்களோட ‘புதியபாதை’க்கு இளையராஜா இசையமைக்கலை. ஆனாலும் படம் ஹிட்டுதானே’ன்னு சொன்னார். ‘ராஜா சார் மியூஸிக் பண்ணிருந்தா, இன்னும் பெரிய வெற்றி கிடைச்சிருக்கும்னு சொன்னேன்.

அதைக் கேட்ட ஏவிஎம்.சரவணன் சார், ‘அப்படீன்னா, உங்க ‘பொண்டாட்டி தேவை’ படம் ராஜா சார் இசை. அது சரியா போகலியே’னு சொன்னார். உடனே நான், ‘ராஜா சார் மியூஸிக்கினாலதான் இந்த அளவுக்காவது படம் போச்சு சார்’னு சொன்னேன். சரவணன் சார், இளையராஜா மேல நான் வைச்சிருக்கிற அன்பை, பக்தியைப் பாத்துட்டு வியந்துட்டாரு.

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x