Published : 17 Jun 2019 09:11 PM
Last Updated : 17 Jun 2019 09:11 PM

என்னை மிரட்டும் அளவுக்கு நான் சின்னப்பையன் கிடையாது: கார்த்தி

எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. மிரட்டும் அளவுக்கு நான் சின்னப்பையனும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தேர்தல், வருகிற 23-ம் தேதி எம்.ஜி.ஆர். ஜானகி மகளில் கல்லூரியில் நடைபெற உள்ளது. கடந்த முறை வெற்றிபெற்ற நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட ‘பாண்டவர் அணி’யும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ் அணி’யும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

எனவே, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நாடக நடிகர்களைச் சந்தித்து இவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி, சேலத்தில் இன்று (ஜூன் 17) நாடக நடிகர்களைச் சந்தித்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் நடிகர் கார்த்தி.

அப்போது அவர் பேசியதாவது:

“நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்வதில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள். அதையெல்லாம் தாண்டி ஒரு விஷயத்தைச் செய்து முடிக்கும்போது, இங்கு கிடைக்கும் அன்பு தான் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. ‘நீங்க மாசம் ரெண்டாயிரம் ரூபாய் அனுப்புறீங்க தம்பி. அதுலதான் மருந்து வாங்கிக்கிறேன்’, ‘நீங்க அனுப்புற காசை, சீட்டு போட்டு சேர்த்துவச்சு என் பேத்திக்கு சீர் செஞ்சுட்டேன்’ என வயதான உறுப்பினர்கள் சொல்றாங்க. அப்படி நாங்க அனுப்புற பணம், அவங்க வாழ்க்கையில் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதுவும் தொடர்ந்து கொடுக்கிறது என்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். இது எப்போதுமே இருக்க வேண்டும் என்றால், அதற்குப் பயங்கர திட்டமிடல் தேவைப்படுகிறது.

முதலில் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான், இதுவரைக்கும் நாங்கள் ஆரம்பித்த எல்லா நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்ய முடியும். ஒருமுறை ஆரம்பித்து, அப்படியே விட்டுவிட்டுப் போகும் விஷயமாக இது இருக்கக்கூடாது. அடுத்தடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து வரவேண்டுமென்றால், அதற்குப் பெரிய திட்டமிடல் தேவைப்படுகிறது. சங்கத்தின் சட்டதிட்டங்களைச் சரிசெய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டுமென நாங்கள் ஆசைப்படுகிறோம். இது பெரிய உழைப்பு. அந்த உழைப்பைப் போடுவதற்கான நம்பிக்கையை நடிகர் சங்க உறுப்பினர்கள் தரவேண்டும்.

இது வெறும் நடிகர் சங்கம் மட்டும் சார்ந்த விஷயமாக நான் பார்க்கவில்லை. இளைஞர்கள் பொதுநலனுக்காகப் போராடும்போது, அவர்கள் உண்மையாக உழைக்கும்போது, மறுபடியும் அவர்களுக்கு அங்கீகாரமும் ஊக்கமும் கிடைக்கும் என நம்பினால்தான், அடுத்தடுத்த தலைமுறையில் இளைஞர்கள் மறுபடியும் வந்து போராடுவார்கள். இல்லை... பணபலத்தாலோ, ஆள்பலத்தாலோ, அதிகாரபலத்தாலோ ஜெயிக்க முடியும் என இந்த சமூகம் காட்டப்போகிறதா? உண்மையாக உழைக்கிற இளைஞர்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம் எனக் காட்டப்போகிறதா? என்பது இந்தத் தேர்தல் முடிவில்தான் தெரியும்.”

இவ்வாறு கார்த்தி பேசினார்.

‘இந்தத் தேர்தல் தொடர்பாக உங்களுக்கு மிரட்டல் எதுவும் வந்ததா?’ என்ற கேள்விக்கு, “எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. என்னை மிரட்டும் அளவுக்கு நான் சின்னப்பையனும் கிடையாது” எனப் பதிலளித்தார் கார்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x