Published : 10 Jun 2019 03:16 PM
Last Updated : 10 Jun 2019 03:16 PM

இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு: மற்ற பதவிகளுக்கு ஜூலை 14-ம் தேதி தேர்தல்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக, பாரதிராஜ ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2017 - 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில், தலைவராக விக்ரமனும், பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.

எனவே, 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், வடபழனி கமலா திரையரங்கில் இன்று (மே 10) நடைபெற்றது. இதில், தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதால், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், மற்ற பதவிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட விரும்புவதால், அந்தப் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற இருக்கிறது. பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு யாரெல்லாம் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த இரண்டு முறை விக்ரமன் தலைவர் பதவியில் இருந்ததாலும், தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும் அவர் போட்டியிட மாட்டார் எனத் தெரிகிறது. மேலும், ஆர்.கே.செல்வமணியும் வேறு இரண்டு சங்கங்களில் பதவிகளில் இருப்பதால், அவரும் போட்டியிட மாட்டார் என்கிறார்கள்.

வருகிற 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இயக்குநர் சங்கத் தேர்தலும் நடைபெற இருப்பதால் தமிழ் சினிமா வட்டாரம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x