Published : 23 Sep 2014 13:24 pm

Updated : 23 Sep 2014 13:26 pm

 

Published : 23 Sep 2014 01:24 PM
Last Updated : 23 Sep 2014 01:26 PM

ஓர் இன்பச் சுற்றுலாவும், அதற்குப் பிறகும்

பைக்கில் வந்த காலேஜ் படிக்கும் மாணவர்கள் சிலர், காரில் வந்த நண்பர்கள்/சக ஊழியர்கள் கூட்டம், பேருந்தில் நிறைந்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் - வார விடுமுறையை உற்சாகமாகக் கழிக்க, உல்லாசமாக இருக்க, நகரத்தின் நெருக்கடியிலிருந்து தப்பிக்க, தூய காற்றைச் சுவாசிக்க, புதிய இடத்தைப் பார்த்து ரசிக்க மலை மேல் இருக்கும் ஒர் அழகிய ஊருக்குச் சுற்றுலா சென்றனர்.

அந்த இடத்துக்குப் போகும் வழியெல்லாம் நிறைந்திருக்கும் காடுகள், இடையிடையே தென்பட்ட நீர்நிலைகள் ரம்மியமாக இருக்கின்றன.

வளைந்து நெளிந்து செல்லும் அந்த மலைப் பாதை மீது வண்டியில் வேகமாகப் பறப்பது பைக்கில் வந்த இளைஞர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கிறது. பாதி தூரம் போன பின்பு ஒரு வியூ பாயிண்டில் வண்டியை நிறுத்தி கடந்து வந்த பாதையையும், விசாலமாகப் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பையும் பார்த்து லயிக்கின்றனர்.

சில்லென்ற குளிர்க்காற்று உடலில் படும் இடங்களில் குறுகுறுப்பை ஏற்படுத்துகிறது. அவர்களில் சிலர் புகைக்கிறார்கள். சிலர் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் பையிலிருந்து பீர் பாட்டில்களை எடுத்து, பல்லால் மூடியைக் கடித்துத் தூர வீசியெறிந்து ‘சியர்ஸ்' சொல்லிக் குடிக்க ஆரம்பிக்கின்றனர். சிப்ஸ் பாக்கெட்டைப் பிரித்து ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.

குடித்து முடித்ததும் சாலையோரமாகப் பாட்டில்களை வீசி எறிகின்றனர். கண்ணாடி பாட்டில் உடைந்து சாலையோரமெங்கும் சிதறுகிறது. பின்னர் பைக்கைக் கிளப்பிக்கொண்டு மேலே ஏற ஆரம்பிக்கிறார்கள்.

காட்டில் அத்துமீறல்

காரில் வந்த அந்த ‘ஒரு நாள் பேச்சுலர்ஸ்' மலையின் மேலுள்ள காட்டுப் பகுதி வழியே செல்லும் சாலையோரமாக வண்டியை நிறுத்துகின்றனர்.

குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தில் பட்டதை ரசித்துக்கொண்டே காரிலிருந்து மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளர்களையும், வாங்கி வந்திருந்த சிக்கன், மட்டன் பார்சலையும் சாலையோரச் சிமெண்டு கட்டையின் மேல் பரப்பி வைக்கின்றனர்.

காருக்குள் இருந்த சவுண்ட் சிஸ்டத்திலிருந்து இசையென்ற பெயரில் ஏதோ கும்... கும்... என அலறிக் கொண்டிருக்கிறது. சிறிது நேரத்தில் பாட்டில் காலியாகிறது. கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு அருகில் காட்டுப் பகுதிக்குள் செல்லும் ஒற்றையடி பாதை இருக்கிறது.

ஓரிருவர் அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினர். ‘இது காட்டுப் பகுதி, வனவிலங்குகள் நடமாடுமிடம், இங்கு அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற வனத்துறையின் அறிவிப்புப் பலகையைப் பொருட்படுத்தாமல் அவர்கள் நடக்கின்றனர்.

பின்பு மலை மேலுள்ள ஊருக்கு வண்டியைக் கிளப்பிக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்ததற்கு அடையாளமாகக் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள், சிகரெட்டு துண்டுகள், சாப்பிடாமல் விட்டுப் போன உணவுப் பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. அவ்வழியே நடந்து சென்ற சில உள்ளூர்க்காரர்கள் இதைப் பார்த்து முகம் சுழிக்கின்றனர்.

எல்லாம் நடக்கும்

சுற்றுலாப் பேருந்து மெல்ல மெல்ல மலையின் மேல் ஏறிக் கொண்டிருக்கிறது. கொண்டை ஊசி வளைவுகளில் பெரிய வட்டமிட்டுத் திரும்புகையில் கியர் மாற்றும்போதும், பிரேக் போடும்போதும் பல வித ஒலிகளை அந்தப் பஸ் எழுப்புகிறது.

ஜன்னலோரம் அமர்ந்திருந்த சிலர் வெளியே தெரியும் மலைகளையும் அதன் மேல் தவழ்ந்து வரும் மேகங்களையும் பார்த்து ரசிக்கின்றனர். சிலர் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே உள்ளே ஓடும் படத்தைப் பார்த்துக் கொண்டே பாக்கெட் காலியானதும் பஸ்ஸிலிருந்து தூக்கி வெளியே எறிகிறார்கள். ஓரிரு காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் வெளியே வந்து விழுகின்றன.

முதன்முதலில் உயரமான மலைப் பகுதிகளுக்கு வந்த சிலருக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கொஞ்ச நேரத்தில் வாந்தியும் வருகிறது. மேலேறும்போது வளைவுகளில் நிறுத்த முடியாததால் ஜன்னல் கண்ணாடியைத் திறந்து தள்ளி, தலையை வெளியே நீட்டி வாந்தி எடுக்கின்றனர். பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள் அவசர அவசரமாக ஜன்னல் கண்ணாடியையும், மூக்கையும் மூடிக்கொள்கின்றனர்.

மலையின் மேல் சமமான நிலப்பகுதியில் இருந்த ஊரில் சிறிய ஹோட்டலின் அருகே பஸ் நிற்கிறது. ஆண்கள் இறங்கிச் சிகரெட் புகைக்கின்றனர். சிலர் ரோட்டோரத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். ஓரிரு பெண்கள் தங்களது குழந்தைகளை ரோட்டோரமாகவே உட்கார வைத்து மலம் கழிக்கச் செய்து, அங்கேயே கால் கழுவி விடுகின்றனர். அதற்குள் பஸ்ஸில் இருந்து சாப்பாட்டு பாத்திரங்கள் ஒவ்வொன்றாக இறக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் தாள் ஒட்டப்பட்ட பேப்பர் தட்டுகளும், பிளாஸ்டிக் டம்ளர்களும் கொடுக்கப்படுகின்றன. சாப்பாடு முடிந்ததும் மிச்ச உணவையும், பிளாஸ்டிக் தட்டையும், டம்ளர்களையும் அருகில் நிரம்பி வழிந்து கொண்டிருந்த குப்பைத்தொட்டிக்கு அருகே வீசி எறிகின்றனர். நாட்டுக் குரங்குகளும், காட்டுப் பன்றிகளும் வந்து வீசப்பட்ட உணவைச் சாப்பிட ஆரம்பிக்கின்றன.

கொஞ்சம் சுற்றிவிட்டு மாலை ஆனதும் மூன்று குழுக்களும் தத்தம் வண்டிகளில் ஏறி நள்ளிரவில் அவரவர் ஊருக்குத் திரும்புகிறார்கள். இரவில் படுக்கப்போகும் முன் சற்று நேரம் தாங்கள் போய் வந்த அன்றைய சுற்றுலாவைப் பற்றியும், அந்த அழகான இடத்தைப் பற்றியும் நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த அழகான, தூய்மையான இடத்தில் தங்களது கவலைகள் எல்லாம் காணாமல் போனது போல மனது இலேசாகவும், சுகமாகவும் இருப்பதைப் போல் உணர்கின்றனர். அப்படியே களைப்பில் உறங்கிப் போகிறார்கள். ஆனால், அவர்கள் சென்றுவந்த அந்த மலைவாசஸ் தலம் மட்டும், பழைய மாதிரியே இல்லை.

யார் சிறந்த சுற்றுலா பயணி?

சுற்றுலாத் தலங்களின் அழகும் வளமும் குறையாமல் இருக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். செல்லும் இடத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுற்றுலா சென்று வந்த இடத்தில் அதற்கான சுவடே இல்லாமல், சென்ற இடத்தை எந்த வகையிலும் சீர்கெடுக்காமல், நமது நடவடிக்கைகளால் சென்ற இடத்தின் தன்மை மாறாமல், அந்த இடத்தின் கலாசாரத்தையும், சட்ட திட்டங்களையும் பின்பற்றி, உள்ளூர் மக்களிடம் கனிவுடன் நடப்பதுதான் ஒரு பொறுப்பான சுற்றுலா பயணிக்கான அடையாளம்.

கவனம் கொள்ள வேண்டியவை

›› செல்லும் இடம் காட்டுப் பகுதியாகவோ, விலங்கு காட்சி சாலையாகவோ இருந்தால் அங்கு அமைதி காத்து, உயிரினங்களுக்கு உணவளிக்காமலும் சீண்டாமலும் இருப்போம்.

›› பிளாஸ்டிக் பை, குவளை, பாட்டில் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். அப்படியே பயன்படுத்தினாலும் குப்பையையும், மீந்து போன உணவுப் பொருட்களையும் கண்ட இடத்தில் வீசி எறியாமல், குப்பை தொட்டியில் போடுவோம்.

›› செல்லும் இடம் கோயிலாகவோ, புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவோ இருந்தால் அங்குள்ள கட்டிட அமைப்புகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல், சுவர்களிலோ, மரங்களிலோ கிறுக்கி வைக்காமல் இருப்போம்.

›› சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வழியில் பொறுப்பான முறையில் வண்டிகளை ஓட்டி செல்வோம். அதிவேகமாக வண்டி ஓட்டுவதைத் தவிர்ப்போம்.

›› சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள உள்ளூர்வாசிகளை மதித்து நடப்போம். அவர்களுடைய கலாசாரம், உடைகள், வாழ்க்கை முறை வித்தியாசமாக இருப்பதை ஆவணப்படுத்துவதற்கு முன், அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே ஒளிப்படமோ, வீடியோவோ எடுப்போம்.

›› பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களைச் சுற்றுலாத் தலங்களில் செய்யாமல் இருப்போம்.கட்டுரையாளர்,
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

குப்பைகள்சுத்தம்சுற்றுச்சூழல்மாசுபிளாஸ்டிக்பாதுகாப்புஉயிரினங்கள்

You May Like

More From This Category

More From this Author

ஒளிரும் காளான்கள்

கருத்துப் பேழை