Published : 09 Sep 2014 10:54 AM
Last Updated : 09 Sep 2014 10:54 AM

3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வாள்கள் சீனாவில் கண்டுபிடிப்பு: 11 வயது சிறுவனுக்கு கிடைத்தவை

சீனாவில், 11 வயதுச் சிறுவன் ஆற்றங்கரையோரம் விளையாடிக் கொண்டிருந்த போது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வாள்கள் அவனுக்குக் கிடைத்தன. அவை, அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் மேற்குப் பகுதியிலிலுள்ள ஜியாங்சு மாகாணத்தில், காவோயு பகுதியில் யாங் ஜுன்ஜி என்ற 11 வயதுச் சிறுவன் கடந்த ஜூலை 2-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தான். லாவோஸோவ்லின் நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவன், ஆற்றில் கைகழுவச் சென்ற போது, கையில் திடமான ஒரு பொருள் தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பார்த்தபோது, மிகப் பழமையான வாளாக இருந்தது.

அந்த வாளை எடுத்துச் சென்று தன் தந்தை யாங் ஜின்ஹையிடம் அச்சிறுவன் கொடுத்தான். இதுகுறித்து யாங் ஜின்ஹை கூறும்போது, “சிலர் அதிக விலை கொடுத்து வாளை வாங்க முயன்றனர். ஆனால், வரலாற்றுச் சின்னங்களை விற்பது சட்டவிரோதம் என நான் நினைத்தேன். அதனால் விற்கவில்லை” என்றார்.

அந்த வாளுடன் கிடைத்த மேலும் சில வாள்களையும் ஜின்ஹை, காவோயு கலாச்சார வரலாற்றுச் சின்னங்கள் அமைப்புக்கு கடந்த 3-ம் தேதி அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வரலாற்றுச் சின்னங்கள் மையத்தின் தலைமை நிர்வாகி லியு ஸிவேய் கூறியதாவது:

“அந்த வாள்களை ஆய்வு செய்ததில் அவை 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்தது. அதாவது, ஷாங் மற்றும் ஷாவோ வம்சத்தினர் ஆண்ட காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது. 26 செ.மீ. நீளமுள்ள வாள் வெண்கலத்தில் செய்யப்பட்டது. குறுவாள், ஒரு அரசாங்க அதிகாரியின் கவுரவச் சின்னமாக இருந்திருக்க வேண்டும். அதில் அலங்கார வேலைப்பாடுகள் உள்ளன.

இந்த வாள்கள் கிடைத்த லாவோஸோவ்லின் நதி, பலமுறை தூர்வாரப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் நதியின் ஆழத்தில் கிடந்த வாள்கள் மேலே வந்திருக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் அகழ்வுப் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

வாள்களைக் கண்டுபிடித்து, அருங்காட்சியகத்தில் சேர்ப்பித்தமைக்காக, அச்சிறுவன் மற்றும் அவரது தந்தைக்கு, வரலாற்றுச் சின்னங்கள் மையமும் காவோயு நகராட்சி அருங்காட்சியகமும் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x