Last Updated : 24 Mar, 2018 07:27 PM

 

Published : 24 Mar 2018 07:27 PM
Last Updated : 24 Mar 2018 07:27 PM

சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் : அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருக்கிறார்.

பொன்ராம் இயக்கத்தில் தற்போது ‘சீம ராஜா’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமந்தா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சூரி காமெடியனாக நடித்துள்ளார். சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்ற இருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில், ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தொடக்கத்தில் ‘தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. பின்னர், தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கி முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆனார்.

எனவே, ‘ஸ்பைடர்’ மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆனார். ஆனால், அந்தப் படமும் கைகொடுக்கவில்லை. கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தான் தமிழில் அவருக்கு மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

தமிழில் தற்போது சூர்யா ஜோடியாக ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்துவரும் ரகுல் ப்ரீத் சிங், கார்த்தி ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடிக்க இருப்பதால், தமிழில் முன்னணி நடிகையாக ஆகிவிடுவார் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x