Published : 27 Sep 2014 10:31 AM
Last Updated : 27 Sep 2014 10:31 AM

உயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பது அவசியம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

உயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையின் பொன்விழா நேற்று நடைபெற்றது. ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ரவிக்குமார் வரவேற்றார். விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசியதாவது:

“ஆரோக்கியமான வாழ்வே சிறந்த பரிசு. உலகிலேயே இந்தியா வில்தான் இளைஞர்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது. நமது நாட்டில் சுகாதார ஆராய்ச்சியில் சுணக்கம் காணப்படுகிறது. மக்களின் நல்வாழ்வுக்கு சுகாதார ஆராய்ச்சி முக்கியமாகும்.

விமானத்துறை, இயந்திரவி யல், ரோபோட்டிக்ஸ் துறைகளின் தொழில்நுட்பத்தை மருத்துவத் துறையிலும் பயன்படுத்த வேண் டும். மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், சிஸ்டம்ஸ் பயாலஜி, பயோ டெக்னாலஜி, ஜினோமிக்ஸ் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

சுகாதாரத் துறையின் பல்வேறு துறைகளுக்கு தரமான ஆராய்ச்சி யாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆராய்ச்சி முடிவுகளை கண்டிப் பாக அமல்படுத்த வேண்டும். இதற் காக கொள்கை வகுப்போரும், ஆராய்ச்சியாளர்களும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும்.

அனைவருக்கும் தரமான, விலை குறைந்த மருத்துவ சேவை தான் தற்போதைய முக்கியத் தேவையாகும். உலகின் மொத்த மருத்துவச் செலவில் இந்தியாவில் 1 சதவீதமே செலவிடப்படுகிறது.

நமது நாட்டில் 10000 ஆயிரம் பேருக்கு 7 படுக்கை வசதிகள் உள்ளன. பிரேஸிலில் 19, சீனா வில் 15, ரஷ்யாவில் 43 படுக்கை கள் உள்ளன. தேசிய கிராமப் புற சுகாதார இயக்கம் மருத்துவத் துறையில் மறுமலர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. ஆரம்ப சுகாதாரமே மிகவும் முக்கியமாகும்.

அனைவருக்கும் சுகாதார வசதி என்பதே மத்திய அரசின் தலையாய நோக்கமாகும். வளர்ந்த நாடுகளில் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. அவற்றை நாம் அறிந்து கொண்டு நமது முறைக்கு ஏற்ப பின்பற்ற வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் புதிய சுகா தாரக் கொள்கையை உருவாக்கி வருகிறது.

இதில் அதிகளவில் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். டெலிமெடிசன் திட்டம் மூலம் கிராமப்புற சுகாதார மையங்கள், அதிநவீன மருத்துவமனைகளோடு தொடர்பில் உள்ளன.

சில மருத்துவ சிகிச்சைகளை ஏழைகளால் மேற்கொள்ள முடிவ தில்லை. வலிமையான மருத்துவக் காப்பீடு திட்டம் இக்குறையை போக்கும். தற்போது 30 கோடி மக்கள் மட்டுமே மருத்துவ காப்பீட்டின் கீழ் உள்ளனர். வரும் 2015-க்குள் இதை 63 கோடியாக உயர்த்த வேண்டும்.

தற்போதைய வாழ்க்கை முறையால் நோய்கள் பெருகி வருகின்றன. சிறிய வயதிலேயே சுகாதார வாழ்க்கை என்பதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும். தரமான ஊட்டச்சத்து நிறைந்த உணவு, விளையாட்டுப் பயிற்சி, போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். தற்போது உலகில் 7 சதவீத குழந்தைகள் அதிக எடை யால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பிறந்த உடனே 4 வாரங்களில் அவர்களுக்கு தேவை யான பாதுகாப்பு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

உயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். சுகாதாரம், கழிப்பிட வசதிகள் முக்கியமான வையாகும். வரும் 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பிட வசதி செய்யப்படும். தொற்று மற்றும் தொற்றா நோய்களை ஒழிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்” என்றார் பிரணாப் முகர்ஜி.

முன்னதாக விழா மலரை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட அதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.

புதுவை துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் பேசும்போது: தமிழகம், புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு தரமான சுகாதார வசதியை ஜிப்மர் அளிக்கிறது. புதுவை யூனியன் பிரதேசம் சுகாதாரத்தில் முன்னோ டியாக உள்ளது. எனது நிர்வாகத் தின் கீழ் உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளிலும் முதன்முதலாக மருத்துவக் கல்லூரி தொடங்கப் படுகிறது என்றார்.

முதல்வர் ரங்கசாமி பேசும் போது: 50 ஆண்டு விழாக் காணும் ஜிப்மர் மருத்துவமனை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. புதுவை, தமிழக மக்கள் தரமான சிகிச்சை பெற உதவியாக உள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பின் ஜிப்மர் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ஆர்.ராதா கிருஷ்ணன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயண சாமி, எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஜிப்மர் தலைவர் எம்.கே.பான் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x