Published : 13 May 2019 03:29 PM
Last Updated : 13 May 2019 03:29 PM

மதரீதியாக திருப்திப்படுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்? கமல்ஹாசனுக்கு கஸ்தூரி கேள்வி

மதரீதியாக திருப்திப்படுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்? சாதி அரசியலையும் எடுத்துக்கொண்டு வாருங்கள் என ட்விட்டர் மூலம் கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று (12.05.2019) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

கமலின் இந்தக் கருத்துக்குப் பிரபலங்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘மத ரீதியாகத் திருப்திப்படுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்?’ என கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை கஸ்தூரி.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கஸ்தூரி, “கமல்ஹாசனின் பல சிந்தனைகளுக்கு நான் பெரிய ஆதரவு. ஆனால், கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் அவரது பேச்சுகளுக்கு நான் ரசிகை இல்லை. பிரித்தாளும் அரசியல் நாடு முழுவதும் இருக்க, இவரது நேர்மறை அரசியல் புத்துணர்வாக இருந்தது. ஆனால், அவரும் பெயர்களை வைத்துப் பேசி அரசியல் செய்யும் நிலைக்கு இறங்கிவிட்டது வருத்தமளிக்கிறது.

மதரீதியாக திருப்திப்படுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்? சாதி அரசியலையும் எடுத்துக்கொண்டு வாருங்கள். இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதியில் கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் பற்றி பேசுகிறார். அப்படியே நாதுராம் கோட்சேவை பிராமணத் தீவிரவாதி என்று வண்ணமிட்டு மற்ற குழுக்களின் ஆதரவையும் கோருங்களேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x