Published : 09 May 2019 12:09 PM
Last Updated : 09 May 2019 12:09 PM

நடிகை கடத்தல் வழக்கு: திலீப்புக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீனிவாசன் கருத்து - ரேவதி சாடல்

நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2 வருடங்களுக்கு முன், நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து மலையாளத் திரையுலகில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பலரும், துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை எதிர்கொள்ள ஒரு அமைப்பையும் தொடங்கினர்.

இதற்கு நடுவில் திலீப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பல கலைஞர்களின் தலைகள் சமூக வலைதளங்களில் உருண்டன. கடும் எதிர்ப்புகளை அந்தக் கலைஞர்கள் சம்பாதித்தனர்.

நடிகர் திலீப், மலையாள திரைக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்யவும் நேரிட்டது. கடத்தல் வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், WCC என்ற பெண்கள் அமைப்பை விமர்சித்தும், திலீப்புக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார் பிரபல நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "திலீப் குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்சர் சுனில் என்பவருக்கு இந்தக் கடத்தலுக்காக 1.5 கோடி ரூபாய் கொடுத்ததாகச் சொன்னதை நம்பமுடியவில்லை. எனக்குத் தெரிந்த திலீப் இதற்கெல்லாம் 1.5 பைசாவைக் கூட செலவிட மாட்டார்.

WCCன் நோக்கம் என்ன என்றே தெரியவில்லை. சினிமாவில் பெண்கள் உழைப்பை யாரும் சுரண்டவில்லை. ஆணும், பெண்ணும் சமம்தான். சம்பளம், அந்த நடிகரின் சந்தை மதிப்பைப் பொறுத்தது.

நயன்தாராவுக்கு ஈடாக எத்தனை நடிகர்கள் சம்பளம் பெறுகின்றனர்? 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்களுக்கான சாதனை என்பது 9 விநாடிகள். ஆனால் பெண்கள் பிரிவில் சாதனை என்பது 11 விநாடிகள். இதில் வித்தியாசம் இருக்கும்போது எப்படி சம்பளத்தில் மட்டும் சமத்துவம் சாத்தியமாகும்?

எனது இந்தக் கருத்துகள் எந்த அமைப்பையும் சிதைக்கும் நோக்கத்தில் சொல்லப்படுவது அல்ல. மேற்கொண்டு நான் பேசுவதை நிறுத்திக்கொள்கிறேன். ஏனென்றால் சில விஷயங்கள் சில வரையறைக்குள் தான் பேசப்பட வேண்டும்" என்று ஸ்ரீனிவாசன் பேசியுள்ளார்.

ஸ்ரீனிவாசனின் இந்தக் கருத்துக்கு ரேவதி உள்ளிட்ட பல கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"நாம் மதிக்கும் நட்சத்திரங்கள் இதுபோலப் பேசுவது வருத்தம் அளிக்கிறது. நட்சத்திரங்கள் பேசும்போது கொஞ்சம் பொறுப்போடு பேச வேண்டாமா? அவர்கள் கருத்துகளை அடுத்த தலைமுறை எப்படி எடுத்துக்கொள்ளும் என்று நினைக்க வேண்டாமா" என ரேவதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

2017-ம் வருடமே, ஸ்ரீனிவாசன் திலீப்புக்கு ஆதரவு தெரிவித்த போது அவருக்கு எதிர்ப்புகள் வெடித்தன. அவரது வீட்டில் சிலர் கருப்பு எண்ணெய் ஊற்றினர். இன்னும் பல விஷயங்களில் ஸ்ரீனிவாசன் கூறிய கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x