Last Updated : 20 May, 2019 03:14 PM

 

Published : 20 May 2019 03:14 PM
Last Updated : 20 May 2019 03:14 PM

பாஜகவை மறைமுகமாக விமர்சித்த யுகபாரதி

'ஜிப்ஸி' இசை வெளியீட்டு விழாவில், பாஜகவை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துப் பேசினார் பாடலாசிரியர் யுகபாரதி.

ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜிப்ஸி'. ராஜு முருகன் இயக்கியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில், படக்குழுவினரோடு தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, “ஜீவா எவ்வளவோ கெட்டப் போட்டு பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், ஜீவா என்ற பெயருக்குத் தகுந்தாற் போல் இன்றுதான் சிவப்பு சட்டை அணிந்து வந்துள்ளார். நான் சிவப்பு சட்டை போட்டு வந்ததுக்கு முக்கியமான காரணம், நேற்று எக்ஸிட் போல் என்ற பெயரில் ஒன்று அறிவிச்சாங்க பாருங்க. அதிலிருந்து கறுப்புச் சட்டையிலிருந்து சிவப்புச் சட்டைக்கு மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என நினைக்கிறேன்.

அண்ணனாக, தம்பி ராஜு முருகனுக்கு நன்றி. அவன் தேசிய விருது வாங்கி இருக்கிறான், வாங்க இருக்கிறான் என்பதில் எல்லாம் மகிழ்ச்சியில்லை. அதை எல்லாம்விட பாந்த் சிங், செல்லப்பா போன்றவர்களை சினிமா மேடைகளில் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறானே... அதற்காகத்தான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சந்தோஷ் நாராயணனின் இசைக்கு மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய இசையில் எழுதுவதை மிகப்பெரிய கவுரவமாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்.

படப்பிடிப்பு நடைபெறும்போது, பலமுறை நானும், தயாரிப்பாளர் அம்பேத்குமாரும் பேசுவோம். ஒருமுறை, 'சார், காசிக்குப் போயிட்டு வருவோமா? அங்குதான் படப்பிடிப்பு நடக்கிறது' என்று அழைத்தார். 'அது பிரதமர் மோடியின் தொகுதி என்பதால் காசி மட்டும் வேண்டாம் சார். வேறு எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்' என்றேன். உடனே,  'நம்ம  2 பேரும் காசிக்கு பாவத்தைப் போக்கப் போகவில்லை சார். காசியில் உள்ள அழுக்கைப் பார்க்கப் போவோம்' என்றார். அந்த ஒருநாள் மட்டும்தான் 'ஜிப்ஸி' படப்பிடிப்புக்குச் சென்று, காசியின் அழுக்கைப் பார்த்துவிட்டு வந்தேன்.

இன்னமும் 3 தினங்களில், இந்தியாவில் உள்ள மொத்த அழுக்கையும் போக்குகிறோமா அல்லது எல்லோரும் அழுக்காகிப் போகிறோமா என்பது தெரிய இருக்கிறது. தமிழனாக இருக்கக்கூடிய யாரும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. ஏனென்றால், நிச்சயமாக தமிழ்நாட்டில் அவர்கள் ஒரு சீட்டைக்கூட வாங்க மாட்டார்கள். எனவே, நாம் பெருமையாக, நம்பிக்கையாக இருக்கலாம்.

தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு, தன் பாடல்கள் மூலமாக நிதி திரட்டிக் கொடுத்த ஒரே போராளி பாடகர் செல்லப்பா மட்டுமே. 'ஜிப்ஸி' வெற்றிப் படம்தான் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் 3 தினங்கள் கழித்து வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தப் படத்தின் வெற்றியை நிச்சயமாகத் தீர்மானிக்கும். அதே முடிவு, இப்படத்துக்கு எத்தனை தேசிய விருதுகள் என்பதையும் தீர்மானிக்கும்” என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x